காவடி இல்லாத தைப்பூசத் திருவிழாவை நாம் எங்கும் பார்க்க முடியாது. பால் காவடி, பன்னீர் காவடி, புஷ்ப காவடி, மயில் காவடி, வேல் காவடி என்று இன்னும் பல வகை காவடிகள் தமிழ்க் கடவுளான முருகப் பெருமானுக்கு ஏந்தப்படுகின்றன. இது ஏன் என்று ஆராய்ந்தால் ஒரு புராணக் கதையை நிச்சயம் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

சிவபெருமானின் அருள்பெற்ற அகத்தியர், இமய மலைச்சாரலில் இருந்த இரு மலைச் சிகரங்களுள் ஒன்றைச் சிவனாகவும் மற்றொன்றைச் சக்தியாகவும் கொண்டு வழிபட்டதால், 'சிவகிரி - சக்திகிரி' என அழைக்கப்பட்டன.

அந்த இரு சிகரங்களையும் தனது இருப்பிடமான பொதிகை மலைக்குக் கொண்டுவர விரும்பினார் அகத்திய முனிவர். அதனைக் கொண்டுவர முருகனை வழிபட்டார். முருகன் திருவருளால் அந்த இரு சிகரங்களையும் கொண்டு வரும் ஆற்றலையும் பெற்று, கேதாரம் வரையில் கொண்டு வந்தவர் சற்று இளைப்பாறினார்.

அப்போது அந்த வழியே தன் மனைவி இடும்பியுடன் வந்த இடும்பன், அகத்தியரை வணங்கி அருள்புரிய வேண்டினான். முனிவரும், "யாம் கொண்டு வந்துள்ள இந்த இரு மலைகளையும் தென்திசை நோக்கிக் கொண்டு வருவாயானால் உனக்குப் பெருமையும் புகழும் சித்தியும் உண்டாகும்" என்றார்.

இதனைக் கேட்டு அகம் மகிழ்ந்து, இடும்பன் இருமலைகளையும் ஆவலுடன் தூக்கினான். அவனால் அந்த இரு மலைகளையும் அசைக்கக்கூட முடியவில்லை.

எத்தனையோ பெரிய மலைகளையெல்லாம் தூக்கி எறிந்த இடும்பன், அசையாதிருக்கும் இந்த மலைகளைப் பார்த்து ஆச்சரியப்பட்டான். இந்த மலைகளை முனிவர் எப்படித் தூக்கிக்கொண்டு வந்தார் என வியந்தான். தன்னால் தூக்க முடியவில்லையே என மிகவும் வருந்தினான்.

பல தடவைகள் முயன்றும் அசைக்க முடியவில்லை. என்ன செய்வது என்று யோசித்துக் கந்தனை நினைக்க, ஒரு சிறுவன் கோமணத்துடன் தோன்றினான். தான் மேலே ஏறிப் போக வேண்டும் அதனால் இந்த மலைகளை நகற்றச் சொன்னான். இடும்பனால் நகற்ற முடியவில்லை. பின் சிறு சண்டை ஆரம்பித்து, பெரிய சண்டையில் இடும்பனை அந்தச் சிறுவன் அடிக்க இடும்பன் இறந்தான்.

உடனே அந்தச் சிறுவன் முருகனாகக் காட்சி அளித்து இடும்பனைப் பிழைக்க வைத்தார். இடும்பனும் வந்தது முருகப் பெருமான் என்று தெரிந்து வணங்கினான்.

பின்னர் இடும்பன் முருகப் பெருமானிடம் “யார் இதே போல் தோளில் காவடி சுமந்து வருகிறார்களோ அவர்களுக்கு அருள் புரிய வேண்டும்” என்று வேண்டினார். அவர் குடி கொண்டிருக்கும் கோவில் வாசலில் தன் சிலை இருக்க வேண்டும். வரும் பக்தர்கள் என் சிலையை வணங்கிவிட்டுத்தான் உள்ளே போகவேண்டும் எனவும் வேண்டினான்.

முருகப்பெருமானும் அங்கனமே அருளினார். இதனால்தான் முருகன் கோவிலில் முதலிலேயே இடும்பன் காட்சி அளிப்பார். பக்தனான இடும்பனை முதலில் வணங்கிவிட்ட பிறகே, மலையேறிச் சென்று, மயில் வாகனனை வணங்கும் வழக்கம் இன்னமும் இருந்து வருகிறது.