வெலண்டைன் நாள் என்றால் என்னவென்று தெரியாதவர்கள் இருப்பது மிக அரிது. தோற்றத்தில் இது மேற்கத்திய உலகக் கொண்டாட்டமாக இருந்தாலும், அண்மைக் காலங்களில் உலகெங்கும் இந்நாள் மிகவும் பிரபலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

அதிலும் குறிப்பாக இளைஞர்களிடம் இந்த கொண்டாட்ட மோகம் அதிகமாக உள்ளது எனலாம். இது மேல் நாட்டு பண்பாட்டை திணிக்கும் முயற்சி என்றும் காதலின் பெயரால் நினைவுப் பரிசுகளை விற்கும் வணிகத் திட்டம் என்றும் ஒரு சிலரால் குற்றம் சாட்டப்பட்டு வந்தாலும் இந்நாள் காதலையும் தாண்டி அன்பர்கள் தினம் என்றும் ஒருசார் மக்களால் அணுசரிக்கப்பட்டு வருகிறது.

ரோஜாக்களின் மவுசு இன்றைய நாளில் வெகுவாக அதிகரிக்கும் என்பது மட்டும் மறுக்கமுடியாத உண்மை.



உண்மை காதலுக்கு 'ரோமியோ- ஜூலியட்', 'ஷாஜகான் -மும்தாஸ்' என பல உதாரணங்கள் இன்றும் சொல்லப்படுகின்றன. இவைகள் மட்டுமல்லாமல் நம் இதிகாச புராணங்களும் பல காதல் கதைகளைச் சொல்லுகின்றன.

இராமாயணத்தில் நாம் அனைவரும் நன்கு அறிந்த காதல் கதாபாத்திரங்கள் ஸ்ரீராமரும் சீதா தேவியும். இவர்கள் ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து வைத்திருந்தார்கள் என்பதை விளக்கும் பல சம்பவங்கள் இராமாயணத்தில் சொல்லப்பட்டுள்ளன.

அதில் ஒன்று பட்டாபிஷேக காட்சியாகும். பட்டாபிஷேகம் நல்லபடியாக நடந்தேறிய பினனர் அனைவருக்கும் பரிசுகள் கொடுகப்பட்டது. அனுமனுக்கும் ஏதாவது கொடுக்க வேண்டும் என்பது சீதையின் எண்ணம்.

ராவணனால் கடத்தப்பட்டிருந்தபோது ஸ்ரீராமரைப் பற்றிய செய்தி கொண்டு வந்து தன் உயிர் காத்தவர் அனுமன் என்ற சிந்தனையோடு இராமரைப் பார்க்கிறாள் சீதை. ஸ்ரீ ராமரும் கண்களாலேயே உத்தரவு கொடுக்கிறார். தன் கழுத்தில் இருந்த மணி மாலையைக் கழற்றி அனுமனின் கையில் கொடுக்கிறார் சீதை.

பேசி கொள்ளாமலேயே கண் பார்வையிலேயே ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளும் தன்மை ஸ்ரீ ராமருக்கும் சீதைக்கும் இருந்ததாக இந்த காட்சி விளக்குகிறது.



மகாபாரதத்திலும் காதலின் சுவை சில காட்சிகளில் பரிமாறப்பட்டுள்ளன. உதாரணத்திற்கு காந்தாரி மற்றும் திருதராஷ்டிரன் அவர்களின் காதல் கதையை எடுத்துக் கொள்வோம்.

அவர்களின் காதல் திருமணத்திற்குப் பிறகே ஆரம்பித்தது. திருதராஷ்டிரனைச் சந்தித்த காந்தாரி அவர் கண் பார்வை அற்றவர் என்பதை உணர்கிறாள். கண் பார்வை இல்லாததால் தன் கணவர் அடைய முடியாத சந்தோஷத்தைத் தானும் அடைய அவள் விரும்பவில்லை.

ஆதலால் திருமணத்திற்குப் பிறகு தன் வாழ்நாள் முழுவதும் தன் கண்களைக் கட்டிக் கொண்டே வாழ்ந்தார் என்று மகாபாரதம் சொல்கிறது. காதலுக்கு நல்ல உதாரணம் இதை தவிர வேறு ஏதும் வேண்டுமா என்ன?


Image credit: Budsofjasmine, Navbharattimes and Bhaktiyoga