CLOSE
CLOSE AD

நடிகையர் திலகம்: சாவித்திரியின் நிழல் தேடும் நிஜம்!

  • 23 May 2018
நட-க-யர்-த-லகம்-ச-வ-த்த-ர-ய-ன்-ந-ழல்-த-ட-ம்-ந-ஜம்

 நடிகையர் திலகம் சாவித்திரி விட்டுச் சென்ற நிழலில் நிஜத்தைத் தேடி அழைகிறோம்.

சமீபத்தில் வெளிவந்து திரையரங்குகளில் வெற்றிநடைப் போட்டுக்கொண்டிருக்கும் ‘நடிகையர் திலகம்’ படம், பிரபல நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றை மிக உருக்கத்துடன் வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.

‘நடிகையர் திலகம்’ சாவித்திரி கதாப்பாத்திரத்தில் நடித்து பலரையும் வியப்பில் ஆழ்த்திய நடிகை கீர்த்தி சுரேஷைப் பாராட்ட வார்த்தைகளே இல்லை. இதற்கிடையில், நடிகர் துல்கர் சல்மான், தோற்றத்தில் சாவித்திரியின் கணவர் 'காதல் மன்னன்' ஜெமினி கணேசனைப் போல் இல்லையென்றாலும், நடிப்பிலும் கம்பீரத்திலும் அசத்தியிருக்கிறார்.

ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்தும் சாவித்திரி தம் நடிப்புத் திறமையினால் ஒரு சிறந்த நடிகையானார் என்பதில் சிறிதளவும் ஐயமில்லை. அவரது எழில் கொஞ்சும் புன்னகை, கருணைப் பொங்கும் கண்கள் மற்றும் வாரி வழங்கும் கரங்களைக் கண்டு பொறாமைக் கொண்டவர்கள் பலர்!

ஆனால், ஜெமினி கணேசனுடன் நிகழ்ந்த திருமணம் முறிந்த பிறகு அவரது வாழ்க்கையில் ஒரு திருப்பம் ஏற்பட்டது. மதுப் பழக்கத்திற்கு அடிமையானார்.

ஆச்சரியம், ஆனால் உண்மை!
 
இப்படத்தில் நடிகை சாவித்திரி மதுவை நாடிச் செல்வதற்கான காரணமாக ஜெமினி கணேசன் சித்தரிக்கப்படுவது பல சர்ச்சைகளை எழுப்பியுள்ளன. இந்தச் சர்ச்சைகளின் மையத்தில் ஜெமினி கணேசனின் மகள் டாக்டர் கமலா முன்வைக்கும் கேள்வி இதுதான்:

“அப்பாதான் சாவித்திரி அம்மாவை மது அருந்து பழக்கிவிட்டார் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. அப்பாவும் சாவித்திரி அம்மாவும் மணம் புரிந்தபோது என் அம்மா பெரிய மன உளைச்சலுக்கு ஆளானார். ஆயினும், அவர் மதுவை நாடிச் செல்லவில்லை. அப்பா, என் அம்மாவிற்கும் மது அருந்தக் கற்றுத்தந்திருக்கலாம் அல்லவா? சாவித்திரி அம்மா மதுப் பழக்கத்திற்கு அடிமையானது அவரது தனிப்பட்ட முடிவு.”

மேலும், அம்மா அலமேலுவின் உணர்வுகளை இப்படம் முழுமையாக ஆராயத் தவறிவிட்டதாகவும், தந்தை ஜெமினி கணேசனின் கதாப்பாத்திரத்தைச் சரியாகச் சித்தரிக்கவில்லையென்றும் ஒரு பேட்டியில் தன் அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
 
ஜெமினி கணேசன், சாவித்திரி மற்றும் அலமேலு ஆகிய மூன்று துருவங்களை இனைக்கும் ஒரு காட்சி இப்படத்தில் உள்ளது. அம்மா அலமேலு அத்திருமணத்தை ஆதரிக்கவில்லை என்று கண்டிப்பாக கூறுகிறார் டாக்டர் கமலா. பின்பு எப்படி அக்காட்சியைப் பற்றிய விவரங்களைப் படக்குளுவினர் சேகரித்து படமாக்கினர் என்பது புரியாத புதிர்.

"எங்கு உண்மை முடிவடைகிறது எங்குக் கற்பனை தொடங்குகிறது என்பதே தெரியவில்லை."

நடிகை சாவித்திரி போலவே, நடிகர் ஜெமினி கணேசனும் ஒரு பிரபல நட்சத்திரமாக இருந்தார். எம்.ஜி.ராமச்சந்திரன், நாகேஷ்வர ராவ் மற்றும் சிவாஜி கணேசன் ஆகியோருக்கு இணையாக ஒரு பெரிய ரசிக தளத்துடன் திரையுலகில் தனக்கென ஒரு முத்திரை பதித்திருந்தார்.
 
இருந்தபோதிலும், இப்படத்தில் நடிகை சாவித்திரியை காட்டிலும் குறைவான புகழும் பட வாய்ப்புகளும் பெற்றவராக சித்தரிக்கப்படுகிறார். சில உண்மைகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன என்பதற்கு இதுவே ஆதாரம் என்கிறார் டாக்டர் கமலா. அவரின் கருத்துகள் முற்றிலும் நியாயமானவை.
 
‘காதல் மன்னன்’ என்றாலே நடிகர் ஜெமினி கணேசனும் அவரது காதல் லீலைகளும்தான் நம் நினைவிற்கு வரும். ஜெமினி கணேசன் திருமணமானவர் என்று அறிந்தே சாவித்திரி அவரைத் திருமணம் செய்துகொண்டார். சாவித்திரி அவரது தனிப்பட்ட முடிவுகளினாலும் விருப்பங்களினாலும்தான் வாழ்வில் வீழ்ச்சிக் கண்டார் என்று கூறலாம் அல்லவா?

இத்திருமணத்தினால் சாவித்திரிக்கு ஏற்பட்ட விளைவுகளை மட்டுமே இப்படம் முழுதும் நாம் கண்ட கண்ணீரும் காட்சிகளும். ஒரு கதையில் எப்போதும் இரண்டு பக்கங்கள் உள்ளன! இப்படம் சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு என்றாலும், ஆராய்ச்சியாளர்கள் ஜெமினி கணேசனின் பாத்திரத்தை எதிர்மறையாகச் சித்தரிக்கும் முன் அவர் குடும்பத்துடன் பேசியிருக்க வேண்டும். 

இக்கதையின் மறு பக்கம், நடிகர் ஜெமினி கணேசனும் அவர் முதல் மனைவி அலமெலுவின் குமுறல்களும். அலமேலு தனது சொந்த வீட்டில் நடிகை சாவித்திரியின் இறுதி சடங்குகளைப் புரிய அனுமதித்தார். சாவித்திரி வாழ்க்கையின் அத்தகைய முக்கியமான பாகத்தை அவரது சொந்த வாழ்க்கை வரலாற்றில் பதிவுசெய்யாதது பெரிய ஆச்சரியம்தான்.

அதே சமயம், சிவாஜி கணேசன் பெயர் மட்டுமே படத்தில் கடந்து போனது கொஞ்சம் ஏமாற்றமாகதான் இருந்தது. இவர்களின் வெற்றிப்படங்களுக்கு பரிசாக சாவித்திரியை நடிகையர் திலகம் மற்றும் சிவாஜி கணேசனை நடிகர் திலகம் எனப் பட்டம் சூட்டிய கவிஞர் கண்ணதாசனின் தோற்றம் இல்லாமல் சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு எப்படி முடிந்தது?


சந்தேகமே இல்லாமல் இந்தப் படம் அன்றைய நாள் நினைவுகளுக்கு மீண்டும் உயிர் கொடுத்து நம்மில் பலரையும் காலம் கடந்து பயணிக்கச்செய்துள்ளது. எனினும், இக்கதை ஆய்வின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளதா அல்லது அந்த நாட்களில் வளம் வந்த கிசு கிசு மற்றும் வதந்திகளால் உருவெடுத்ததா?

உங்கள் எண்ணங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்! 

Image credit: IndiaGlitz, TheIndianExpress, JustDial, Ibtimes, DnaIndia and EanadulIndia