மார்ச் 8ஆம் தேதி உலக மகளிர் தினம் அகிலமெங்கும் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது என்பது நாம் அறிந்த ஒன்றே. இன்றைய நவநாகரீக கால வளர்ச்சியில் பெண்களின் பங்கு இன்றியமையாத ஒன்றாக திகழ்கிறது.

வீட்டு நிர்வாகம் என தொடங்கி விண்வெளி வரை அவர்களின் புகழ் கொடிக்கட்டி பறக்கிறது. ஆனால், பெண்களுக்குச் சரி சமமான நிலை ஏற்படாத அந்த காலத்திலேயே பெண்களின் ஆற்றலை அனைவரும் மதிக்க வேண்டும் என சிந்தனை சினிமா மூலம் மக்களுக்குச் சொல்லப்பட்டது.

திரைப்படங்களில் கதாநாயகியை வெறும் அழகு பொருளாக சித்தரித்த காலத்தில் அதற்கும் சாட்டையடி கொடுத்தனர் சில படைப்பாளிகள்.

கே.பாலசந்தர்பெண்களின் உள்ளத்து உணர்வுகளையும், ஆசைகளையும், ஏக்கங்களையும், அவர்களின் சமூகக் கோபங்களையும் பெண்களைவிட மிகச் சிறப்பாக திரையில் வெளிப்படுத்தி வெற்றி கண்டவர் இயக்குநர் சிகரம்.

இருக்கோடுகளில் செளகார் ஜானகி, அவள் ஒரு தொடர்கதையில் கவிதா, அபூர்வராகங்களில் பைரவி, வறுமையின் நிறம் சிவப்பில் ஸ்ரீ தேவி, நினைத்தாலே இனிக்கும் சோனா, சிந்துபைரவியில் சிந்து, 'மனதில் உறுதி வேண்டும்' நந்தினி, ‘புதுப்புது அர்த்தங்கள் கீதா என பெண்களுக்கு கனமாக கதாபாத்திரங்களை உருவாக்கி தமிழ்ச் சினிமாவில் கதாநாயகிகளுக்காகவும் படம் 100நாள் ஓடும் என்ற உண்மையை வெளிச்சம் போட்டு காட்டியவர்.

விசுபெண்களைத் திரையில் அழியாத கோலங்களாக வரைந்தவர் இயக்குநர் விசு. பக்கத்து வீட்டில் நாள்தோறும் நடக்கும் பிரச்சனைகளை மையமாக கொண்டே அவரின் பல திரைப்படங்கள் அமைந்தன.

குடும்பத் தலைவி என்ற கதாப்பாத்திரத்திற்கே முக்கியத்துவம் தந்தவர். சம்சாரம் அது மின்சாரத்தில் லட்சுமி, வரவு நல்ல உறவில் ரேகா, திருமதி ஒரு வெகுமதியில் கல்பனா என பல அழுத்தமான பெண்களின் பக்கத்தைக் காட்டியவர்.

பாரதிராஜாபெண் குழந்தையை பூமிக்கு பாரமாய் எண்ணி கல்லிப்பாலைக் கொடுத்து கொள்ளும் கொடூரத்தைக் கருத்தம்மாவின் மூலமாக உலகுக்குச் சொன்னவர்.

பெண் என்பவள் போற்றப்பட வேண்டியவளே தவிர சாபம் அல்ல என்ற கருத்தைப் பாமரர்களுக்கும் சொன்னவர். தன் கதையில் வரும் பெண் கதாபாத்திரங்களை மக்களின் மனதில் விதைக்கச் செய்தவர்.

பாலு மகேந்திரா


நடுத்தரவர்க்கத்தின் வீடு கட்டும் சராசரி ஆசையையும், அதற்கான சிக்கல்களையும்,இழப்புகளையும், வருத்தங்களையும் ஒரு பெண்ணின் மூலம் 'வீடு' திரைப்படத்தில் வெளிப்படுத்தியிருந்தார் பாலுமகேந்திரா.

ஓர் ஆண் துணையின்றி வாழ முடியும் என்ற தைரியமான முடிவை ஒரு பெண் எடுக்கலாம் என்று திரையில் சொன்னவர்.

சக்தியாக திகழும் அனைவருக்கும் உலக மகளிர் தின வாழ்த்துகள்!


Written by: Sarathi Sandragas
Image credit: Lamaakan and Newsnation