மக்கள் மத்தியில் நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை எடுத்துரைக்க, 1991 ஆம் ஆண்டு உலக நீரிழிவு கூட்டமைப்பு மற்றும் உலக சுகாதார அமைப்பினால் நவம்பர் 14 உலக நீரிழிவு தினமாக பிரகனப்படுத்தப்பட்டது.

உலக சுகாதார அமைப்பின் தரவின்படி கடந்த 2019 ஆம் ஆண்டில் 1.5 மில்லியன் மக்கள் நீரிழிவு நோயினால் மரணமடைந்துள்ளனர். மேலும், 2014 ஆம் ஆண்டு கணக்கீட்டின்படி உலகத்தில் 422 மில்லியன் மக்கள் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, மலேசியாவில் 18 வயதிற்குப் மேற்பட்ட 3.9 மில்லியன் மலேசியர்கள், நீரிழிவு நோயினால் அவதியுறுகிறார்கள் என்பது கவலையளிக்கிறது.

நீரிழிவு நோய் எதனால் ஏற்படுகிறது என்று நினைக்கிறீர்கள்? நமது உடலில் போதுமான அளவு கணையநீர் (இன்சுலின்) சுரக்காமல் இருப்பதே நீரிழிவு நோய்க்கு அடிப்படையாக அமைகிறது. அதாவது நாம் சாப்பிடும் உணவிலுள்ள சக்கரைச் சத்துகளை உடலுக்குத் தேவையான குளுக்கோஸ் சக்தியாக மாற்றுவதற்குக் கணையநீர் அவசியமாகிறது. எனவே, கணையநீர் தேவையான அளவு உற்பத்தியாகவில்லையெனில் சக்கரை நேரடியாக இரத்தத்தில் கலந்துவிடும்.

நம்மில் பலரும் நீரிழிவு நோய் என்பதை மிகச் சாதாரணமான நோயாகப் பார்க்கும் வழக்கம் உண்டு. அதுமட்டுமல்லாமல், பலர் தங்களுக்கு இந்நோய் இருப்பது கூட தெரியாமல் இருக்கின்றனர். நீரிழிவு நோய் சிறுநீரகச் செயலிழப்பு, இதய நோய், விழித்திரை நோய், நரம்பு சார்ந்த பிரச்சனைகள் என எண்ணற்ற உடல் உபாதைகளுக்குக் காரணமாக அமைகிறது என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

நீரிழிவு நோயின் அறிகுறிகளாக அதிகமாக தாகமெடுத்தல், அடிக்கடி சிறுநீர் கழிப்பது, காயங்கள் மெதுவாக ஆறுதல், உடல் இடை குறைதல், அதிகளவு பசியெடுத்தல், கண் பார்வை மங்குதல், அதிகளவு சோர்வாக இருத்தல் ஆகிய அறிகுறிகள் தென்பட்டால் மருத்துவர்களைக் காணத்தவறாதீர்கள். நீரிழிவு நோயிலிருந்து தற்காத்துக் கொள்வதற்கு ஆரோக்கியமான உணவுகள், உடற்பயிற்சிகள் மேற்கொள்ள மறவாதீர்…சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும்.

தகவல்களுக்கான மூலம்: ta.nhp.gov.in, astrazeneca.com