தீபமானது இருளை நீக்கி ஒளியைத் தரக்கூடியது என்று நாம் அனைவரும் அறிவோம். ஆனால், கார்த்திகை மாதத்தில், தொடர்ந்து மூன்று நாட்கள் வீட்டில் தீபம் ஏற்றிக் கொண்டாடுவதன் பின்னணி என்ன ?

கார்த்திகைத் திருநாள் உருவாகியதற்கானக் காரணக் கதைகளில், மகாவிஷ்ணுவிற்கும் பிரம்ம தேவருக்கும் இடையில் ஏற்பட்ட போட்டியும் ஒன்று என நம்பப்படுகின்றது.

அதாவது, இவர்கள் இருவருக்கு இடையிலும், தமக்குள் யார் பெரியவர் என்ற போட்டி உருவாகியபோது, அந்த போட்டியை முடித்து வைப்பதற்குச் சிவபெருமான், ஒரு பெரும் ஜோதியாக உருவாகி, ஜோதியின் அடியை மகாவிஷ்ணுவும், உச்சியைப் பிரம்ம தேவரும் பார்க்க வேண்டும் எனக் கூறினார். இவர்களில், யார் முதலில் பார்க்கிறார்களோ, அவரே பெரியவர் என்ற அசரீரியைக் கேட்டவுடன், இருவரும் போட்டியிடுகின்றனர்.

அன்னப்பறவையாக உருமாறிய பிரம்மர், பறந்து உச்சியைத் தேடினார். பன்றியாக உருமாறிய விஷ்ணு, நிலத்தைத் துளைத்துக் கொண்டு அடியைத் தேடினார். ஆனால், எவ்வளவு தேடியும் இருவராலும் வெற்றிக்கொள்ள முடியவில்லை. இருவரும், தங்களின் தோல்வியை ஒப்புக்கொண்டதோடு, சிவபெருமானிடம் ஒரு கோரிக்கையும் விடுத்தனர்.

அதாவது, சிவபெருமான் ஜோதி பிழம்பாகத் தோன்றி அனைவருக்கும் காட்சியளிக்க வேண்டும் என இருவரும் கேட்டுக்கொள்ள, சிவபெருமான் தனது பஞ்சபூத தலங்களில் ஒன்றான, திருவண்ணாமலையில் ஜோதியாக எழுந்தருளினார்.

எனவே, சிவபெருமான் திருவண்ணாமலையில் ஜோதியாகக் காட்சியளித்த கார்த்திகை நாளையே நாம் ஆண்டுதோறும் கார்த்திகைத் தீபத் திருநாளாகக் கொண்டாடுகிறோம் என இன்றும் கூறப்படுகின்றது. அதுமட்டுமில்லாது, கார்த்திகைத் திருநாள் உருவானக் காரணக் கதைகளில், கார்த்திகை மைந்தன் பிறப்பும் ஒன்றாகாத் திகழ்கின்றது.

அதாவது, தேவர்கள் தங்களைத் துன்புறுத்தும் அசுரர்களை, வதம் செய்ய சிவபெருமானிடம் வேண்டினர். அவர்களின், வேண்டுதலுக்கு, சிவபெருமானும் தனது நெற்றிக்கண்ணிலிருந்து ஆறு தீச்சுடர்களை எழுப்பினார். அந்த ஆறு தீச்சுடரும், ஆறு குழந்தைகளாக மாறின. அவ்வாறு உருவாகிய ஆறு குழந்தைகளையும் வளர்த்தவர்கள் கார்த்திகைப் பெண்கள். பிறந்த குழந்தைகள் வளர்ந்த பிறகு, சக்தி ஆறு குழந்தைகளையும் ஒன்றாக இணைக்கிறார்.

அதோடு, சிவபெருமான் கார்த்திகைப் பெண்களை வானத்தில் நட்சத்திரமாக மாற்றுகிறார். எனவே, ஆறு குழந்தைகளும் ஒன்றிணைந்த நாள்தான், திருக்கார்த்திகை நாள் என நம்பப்படுகின்றது.

Image Credit : AGS OFFICIAL VLOG