“தைப் பொங்கலும் வந்தது பாலும் பொங்குது பாட்டுச் சொல்லடியோ !”
தமிழர் பண்பாட்டு விழாவான பொங்கல் திருவிழா, ஆண்டுதோறும் ஜனவரி மாதம், சூரிய பகவானுக்கு நன்றி சொல்லும் வகையில் கொண்டாடப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல், உழவர்களும், தங்களுக்கு உதவிய இயற்கை மற்றும் கால்நடைகளுக்கு, நன்றி தெரிவிக்கும் வகையில் இந்த விழாவை ஆண்டுதோறும் கொண்டாடி வருகின்றனர்.
பொங்கல் திருவிழா நான்கு நாட்களாகக் கொண்டாடப்படுவதன் பின்னணியைப் பார்ப்போம்.
முதல் நாள்: போகி
மார்கழியின் கடைசி நாளில் போகி கொண்டாடப்படுகிறது. போகியின் போது, பயன்படுத்தப்படாத பழையப் பொருட்களை நெருப்பில் எரிப்பது ஒரு வழக்கம். இந்த கொண்டாட்டம் உங்கள் வாழ்க்கையிலிருந்து தேவையற்ற விஷயங்களை அகற்றி புதிய தொடக்கத்தை உருவாக்குவதைக் குறிக்கிறது.
இரண்டாம் நாள் : தைப் பொங்கல் அல்லது சூரியப் பொங்கல்
இந்த நாளில், சூரியப் பகவானுக்கு நன்றிச் சொல்லும் வகையில், சூரியன் உதிக்கும் திசையில், மண் பானை வைத்து பால் ஊற்றி பொங்கல் செய்வது வழக்கம். பால் பொங்கி வரும் வேளை "பொங்கலோ பொங்கல்" என கூச்சலிட்டு தங்களின் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்வர்.
மூன்றாம் நாள் : மாட்டுப் பொங்கல்
மூன்றாவது நாள், விவசாயம் மற்றும் விவசாயத்தில் பெரிதும் பங்களிக்கும் பசுக்கள், காளைகள் மற்றும் மாடுகளுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்த நாளில், மாடுகளின் கொம்புகள் வர்ணச் சாயங்களால் அலங்கரிக்கப்பட்டு, மலர் மாலைகள் மற்றும் மணிகள் அவர்களின் கழுத்தில் கட்டப்படுகின்றன. விலங்குகளின் மகத்தான பங்களிப்புக்கு நமது நன்றியைக் காட்டுவதற்காக மாட்டு பொங்கல் கொண்டாடப்படுகிறது.
நான்காம் நாள் : காணும் பொங்கல்
இது பொங்கல் கொண்டாட்டத்தின் இறுதி நாள். தமிழில் 'காணும்' என்றால் பார்ப்பது என்று பொருள். காணும் பொங்கல் என்பது கன்னி பொங்கல் என்றும் அழைக்கப்படுகிறது. கன்னி பொங்கலன்று திருமணமாகாதப் பெண்கள், ஒன்றுகூடி பொங்கல் வைத்து வழிபட்டால், விரைவில் திருமணம் ஆகும் என்பது ஐதீகம்.
தமிழர் திருவிழாவான தைப் பொங்கலை இனிதே கொண்டாடுவோம்! பொங்கல் வாழ்த்துகள்! பொங்கலோ பொங்கல்!
Image Credit : lohrifestival, PhotoCulture, thehindu, goodjiveet, Cottage9
Revathi
Mon Jan 13 2025