நம்முடைய விஷேசங்கள் என்றுமே நம்முடைய பாரம்பரிய நடனங்களும் வாத்தியங்களும் இல்லாமல் ஆரம்பிக்கப்படுவதும் இல்லை; இவை இல்லாமல் களைகட்டுவதும் இல்லை. திருவிழா என்றாலே இளையோர் முதல் பெரியோர் வரை குடும்பமாகக் கலந்துக் கொண்டு தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதும் கருத்துப் பரிமாற்றத்தை நடத்துவதும்தான் வழக்கம். நம் அடையாளத்தை அடுத்த தலைமுறையினருக்கு திரையிட்டுக் காட்டி நம் வாழ்க்கைச் சக்கரத்திற்கு இந்த பாரம்பரிய பிடிமானம்தான் அச்சானி என்பதையும் உணர்த்தும் வேளையில் இந்த வைபங்கள்தான் நாட்டுப்புற கலைஞர்களின் வாழ்வாதாரத்திற்கு அடித்தளமாகும் விளங்குகிறது.
அவ்வகையில் தைப்பூச தினத்தை மெருகூட்டும் இந்த பாரம்பரிய பொக்கிஷங்களின் பிண்ணனியைப் பார்ப்போம்.
நாதஸ்வரம்
நம்முடைய சுப நிகழ்வுகள் அனைத்தும் மங்கள வாத்தியமான நாதஸ்வரத்துடன் தொடங்குவதுதான் வழக்கம். தைப்பூச தினத்தன்று எல்லாக் கோயில்களிலும் இந்த நாதஸ்வர ஒலியைக் கேட்டுதான் பூஜையே ஆரம்பிக்கும். நாகத்தைப் போன்று உருவத்தில் நீண்டிருந்த்ததின் காரணமாகவும் நாதசுவரம் அந்நாளில் அழைக்கப்பட்டது. இதனுடைய இனிமையான நாதம் காரணமாக பிற்காலத்தில் இது நாதஸ்வரம் எனப்பட்டது. தென்னிந்தியர்களின் பாரம்பரியக் கலையானது தொடக்கத்தில் ஒரு குடும்பத்தின் மூத்த தலைமுறையினரிடமிருந்து அந்தக் குடும்பத்தின் அடுத்த தலைமுறையினருக்கு தொடரப்பட்டது. பின்னாளில் அனைவரும் இந்தக் இசைக் கருவியை கற்றுத் தேர ஆரம்பித்தனர். தற்பொழுது நம் நாட்டில் பெண்களும் இந்த நாதஸ்வர கருவியை வாசிப்பது பிரமிப்பாக இருந்தாலும் இந்தக் கலை தொடர்ந்து வளரும் என்ற நம்பிக்கையைத் தருகின்றது.
உறுமி மேளம்
நம்முடைய நாட்டுப்புற கலைகளில் முக்கிய வாத்தியம் இந்த உறுமி மேளம். விலங்குகள் உறுமுவதைப் போன்று ஒலியை எழுப்பக் கூடிய இசைக்கருவி என்பதால் உறுமி என்று பெயர் வந்திருக்கலாம். இது இருமுகங்களைக் கொண்ட தோல் இசைக்கருவி ஆகும். இக்கலையின் ஜனனம் என்னவோ தமிழகமாக இருந்தாலும் இதன் பயணம் என்பது மலேசிய இளைஞர்களின் ஈடுபாட்டில் வெகுதூரத்திற்கு நீடிக்கின்றது, காவல் தெய்வங்களை வணங்குவதில் முக்கிய இடம் வகிக்கும் இந்த உறுமிமேளம் மலேசிய வைபவங்கள் அனைத்திலும் முக்கிய பங்கு வகிக்கும் இசைக் கருவி. இங்கு பெரும்பாலான கோயில்களில் உறுமி மேளக் குழு இருப்பதைப் பார்க்கலாம். பெரும்பாலான இளைஞர்கள் பகுதி நேரமாக இக்கலையையை நடத்தி வந்தாலும் அனைத்து திருவிழாக்களின் உயிரோட்டம் இந்த உறுமிமேளம்.
தப்பாட்டம்
தப்பு என்ற இசைக்கருவியைக் கொண்டு வாசிப்பத்தால் இதற்கு தப்பாட்டம் என்று பெயர். இதற்கு ' பறையாட்டம்' என்ற பெயரும் உண்டு. அக்காலத்தில் ஒரு விஷயத்தை மக்களுக்கு தெரிவிக்கும் போது பறையடித்துதான் தெரிவிப்பர். தற்பொழுது தப்பாட்டம் என்ற கலை பெண்களும் கற்றுக் கொள்ளூம் கலையாக உருவெடுத்துள்ளது மட்டுமில்லாமல் தமிழகத்தில் இந்தக் கலை தொடர்பான மேற்படிப்பை பல்கலைகழங்களில் மேற்கொள்ள வாய்ப்புகளூம் உள்ளன. நம் நாட்டில் இந்த தப்பாட்டம் உறுமிமேளத்திற்கு அடுத்து பிரபலமாக இருக்கும் இசைக் கருவியாகும். குறிப்பாக வடக்கு மாநிலங்களான பேராக், பினாங்கு, கெடாவில் நடக்கும் தைப்பூசத் திருவிழாவில் இந்த தப்பாட்டக் கலைஞர்களின் கைவண்ணத்தைக் கண்டு, கேட்டு ரசிக்கலாம். சுமார் 8 மணிநேரத்திற்கு குறையாமல் தப்பாட்டம் வாசிக்கும் திறமைக் கொண்ட இந்த கலைஞர்கள் இலைமறைக் காயாக இல்லாமைக்கு முக்கியக் காரணம் தைப்பூசமே.
கோலாட்டம்
குச்சிகளைக் கையில் பிடித்துக் கொண்டு பாடலோடு ஆடுவதே கோலாட்டம். ஒரு காலத்தில் பெண்கள் மட்டுமே ஆடி வந்த கோலாட்டத்தை இன்று ஆண்களும் ஆடுகின்றனர். ஆரம்பத்தில் மெதுவாகத் தொடங்கும் இந்த ஆட்டத்தின் இசை போகப் போக வேகமாக மாறும். ஆனால் இந்த கோல்களின் மூலம் எழுப்பட்டும் ஒலியே முதன்மை இசையானது. இந்த ஒலியானது நம் சிந்தனைகளை ஒருநிலைப்படுத்துவதோடு கூர்ந்து கவனிக்கும் வல்லமையையும் அதிகரிக்கின்றது. பார்பதற்கு சுலபமாக இருந்தாலும் பயிற்சி பெற்றவர்கள் மட்டுமே சிறப்பாக ஆடமுடியும் ஆட்டம் இது. கோலாட்டத்தில் காடுகளின் செழிப்பு, சிறப்பு, இயற்கை, விலங்குகள், குல தெய்வங்கள் என்பவன பாடுபொருளாகக் கொள்ளப்படும். இது நம்முடைய பழந்தமிழர்களின் இயற்கையோடு இயைந்த வாழ்க்கை முறையை நமக்கு உணர்த்துகின்றது.
கோலாட்டம்
குச்சிகளைக் கையில் பிடித்துக் கொண்டு பாடலோடு ஆடுவதே கோலாட்டம். ஒரு காலத்தில் பெண்கள் மட்டுமே ஆடி வந்த கோலாட்டத்தை இன்று ஆண்களும் ஆடுகின்றனர். ஆரம்பத்தில் மெதுவாகத் தொடங்கும் இந்த ஆட்டத்தின் இசை போகப் போக வேகமாக மாறும். ஆனால் இந்த கோல்களின் மூலம் எழுப்பட்டும் ஒலியே முதன்மை இசையானது. இந்த ஒலியானது நம் சிந்தனைகளை ஒருநிலைப்படுத்துவதோடு கூர்ந்து கவனிக்கும் வல்லமையையும் அதிகரிக்கின்றது. பார்பதற்கு சுலபமாக இருந்தாலும் பயிற்சி பெற்றவர்கள் மட்டுமே சிறப்பாக ஆடமுடியும் ஆட்டம் இது. கோலாட்டத்தில் காடுகளின் செழிப்பு, சிறப்பு, இயற்கை, விலங்குகள், குல தெய்வங்கள் என்பவன பாடுபொருளாகக் கொள்ளப்படும். இது நம்முடைய பழந்தமிழர்களின் இயற்கையோடு இயைந்த வாழ்க்கை முறையை நமக்கு உணர்த்துகின்றது.
பொம்மலாட்டம்
பொம்மலாட்டம் என்பது புராணக் கதைகளை மக்களுக்கு மீண்டும் பொம்மைகளின் அசைவைக் கொண்டு நடத்திக் காட்டுவது ஆகும். இந்த ஆட்டமானது சரித்திரத்தை புரட்டிப்பாற்கும் தருணத்தை ஏற்படுத்திக் கொடுக்கின்றது. சரித்திரம் என்பது கடந்த காலத்தின் சுவடாக இருந்தாலும் அதன் சாரம் நம் வருங்காலத்தின் உரமாக இருக்க வேண்டும் என்பதை உணர்த்துவதே இந்த ஆட்டத்தின் முக்கிய நோக்கம். இது தமிழர்களின் மிகப் பழமையான மரபு வழிக் கலைகளில் ஒன்றாக இருந்தாலும், எந்த ஒரு வட்டாரத்திற்கோ சடங்கிற்கோ உட்பட்ட கலை அல்ல. கல்யாண முருங்கை அல்லது முள் முருங்கை என அழைக்கப்படும் மரத்தில் இருந்து செய்யபடும் பொம்மைகளை சிறிய திரைக்குப் பின்னால் அசைத்து கதை சொல்லி வந்த இக்கலை தொய்ந்து வரும் கலையாக இருக்கின்றது. கால ஓட்டத்தில் மாற்றம் கண்டு இன்றைய காலகட்டத்தில் விழாக்களில் கலைஞர்கள் தங்கள் மீது பொம்மைகளை கட்டிக் கொண்டு ஆடி வருகின்றனர்.
பொய்க்கால் குதிரை ஆட்டம்
பொய்யான குதிரைக் கூட்டைச் சுமந்து கொண்டு மரக்காலில் நின்று ஆடும் ஆட்டம் பொய்க்கால் குதிரை ஆட்டம் ஆகும். புரவியாட்டம், புரவி நாட்டியம், பொய் குதிரை ஆட்டம் என வேறு பெயர்களிலும் இந்தக் கலை அழைக்கப்படுகிறது. பொய்க்கால் குதிரை ஆட்டம் தமிழகத்தில் தஞ்சாவூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு முதலில் வந்து, பின்னர் பிற பகுதிகளுக்கும் பரவியதாகவும் கூறுகிறார்கள். இந்தோனேசியா போன்ற நாடுகளிலும் இந்தக் கலை நடத்தப்படுகிறது. உடலை சமநிலை படுத்தி ஆடும் இந்த ஆட்டத்திற்கு பல நளினங்கள் கொண்ட அடிகள் பயிற்சியில் வழங்கப்படுகின்றன. நம் நாட்டில் காலில் கட்டையை கட்டி ஆடுபவர்களின் எண்ணிக்கை என்னவோ குறைவுதான். ஆனால் உடலில் இந்த பொய்யான குதிரைக் கூட்டை சுமந்து ஆடும் கலைஞர்களும் பல சிரமங்களுக்கு மத்தியில்தான் இந்தக் கலையை கோயில் விழாக்களில் ஆடுகின்றனர்.
மேற்கண்ட பாரம்பரியக் கலைகள் வரிசையில், சண்டி மேளம், நையாண்டி மேளம், குறும்பரந்தூம்பு, உயிர்த்தூம்பு, கடம் தம்பட்டம், புலியாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம், கட்டைக்கால் ஆட்டம் என எண்ணிலடங்கா. இந்தக் கலைகள் யாவும் இன்று இது போன்ற வைபவங்களில்தான் காணமுடிகின்றது. சில கலைகள் ஏடுகளில் புரட்டிப் பார்ர்க்கும் அளவிற்குதான் தரிசனம் கிடைக்கின்றது.
நம்முடைய முக்கியத் திருவிழாக்கள் குறிப்பாக தைப்பூசத்தன்று இந்தக் கலைகள் அனைத்தையும் ஒரே இடத்தில் காண முடியாவிட்டாலும் ஒவ்வொரு மாநிலமும் ஒவ்வொரு கலைகளை திரையிட்டுக் காட்டும் தளமாக அமைகின்றது. அதேவேளையில் இந்தக் கலைகள் இன்னும் நம் நாட்டில் வாழ்கின்றது என்றால் அதற்கு காரணம் கலைஞர்களின் ஆர்வம்தான். இருப்பினும் நம் நாட்டை பொறுத்த வரை பாரம்பரியக் கலைகளை கற்று அதை பகுதி நேரத் தொழிலாகத்தான் செய்து வருகின்றனர். மேற்குறிப்பிட்ட கலைகள் தொடர்ந்து நிலைக்க வேண்டுமாயின் இவர்களின் இந்த ஆர்வத்திற்கு உரமாக முறையான அங்கீகாரமும் திறமைக்கேற்ற ஊதியமும் கிடைப்பதை உறுதி செய்வது அனைவரின் கடமையாகும்.