உயிர் அது வாழும் வழியினை அதுவே தேடிக் கொள்ளும். இதுதான் இயற்கை. ஓர் அணுவில் இருந்து உருவான உயிர் சூழ்நிலை மாற்றங்களை தனக்குள் உள்வாங்கி அதற்கேற்றாற்போல் தன்னை மாற்றியமைத்துக் கொள்ளும். இதுதான் ஓர் அணுவில் இருந்து பிரிந்து ஆறறிவு படைத்த மானுடனாக உயிர்கள் உருவாகக் காரணம்.

வாழ்ந்துதான் ஆக வேண்டும் என்ற சூழலில் வாழ்வதற்கு என்ன வழி என்பதை உயிர்கள் தேட ஆரம்பிக்கும். இந்தத் தேடல் குறுகிய தேடலாக இருந்தால் அது தற்காலிக தீர்வாகத்தான் அமையும். நிரந்த தீர்வுக்கு அறிவார்ந்த தேடல் இருக்க வேண்டும். இந்த சிந்தனைதான் வாழ்வின் தேடலுக்கான நிரந்தர தீர்வு. இந்த அறிவுதான் வேல், வேல் தான் முருகன்.

நீரிலிருந்து தோன்றிய உயிர் நிலங்களில் வாழத் தொடங்கின. அவ்வகையில் ஆதிகாலங்களில் மக்கள் மலை மற்றும் மலை சார்ந்த பகுதிகளில் வாழ்ந்ததாக கூறப்படுகிறது. தன் வாழ்விற்கு இயற்கையையும் இயற்கை சார்ந்த செயல்பாடுகளையும் அகன்று நோக்கி கூர்ந்து சிந்திக்க வேண்டும் என்பதை உணர்ந்தனர். இந்த அறிவை பற்றாகக் கொண்டனர். இந்த அறிவை முருகனாக வணங்கினர். முருகனை தமிழ் கடவுள் என்றனர்.

தமிழர்கள் தமிழ் மொழியை ஒருத்தரை ஒருத்தரை தொடர்பு கொள்ளும் கருவியாகக் கொள்ளாமல் வாழ்வியல் கருவியாகக் கொண்டனர். தமிழ் மொழியாக மட்டும் இல்லாமல் அறிவாகவும் செயல்பட்டது. தமிழர்கள் இயற்கையைப் படித்தனர் அதை தமிழாக வடித்தனர். முத்தொழிலும் கொண்டதுதான் 'ஓம்' என்ற பிரணவ மந்திரம் . ஆ ( ஆக்கல் ) + உ ( காத்தல் ) + ம ( ஒடுக்கல்) = ஓம்

இங்கு ம் + உ, ர்+ உ, க + உ = முருகு என்பது காத்தல். முருகு என்பவன் தமிழ்க் கடவுள். உன்னை எல்லா சூழலிருந்தும் காப்பது உன் அறிவு. அறிவே தமிழ், தமிழே முருகன்.

ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவன் முருகன். முருகனை யாருடனும் ஒப்பிட முடியாது. இதைத்தான் பாரதி 'யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவ தெங்குங்குமுண்டோ' என்றார். தமிழை எந்த மொழியுடனும் ஒப்பிட முடியாது. ஏனென்றால் தனக்கு சரிநிகரான பொருள் உடனே வேறொரு பொருளை ஒப்பிட்டு பார்க்க முடியும். அறிவாக விளங்கும் ஒரே மொழியை ஒப்பிட வேறொரு மொழியில்லை. உச்சத்தில் இருக்கும் தமிழும் மலையின் உச்சத்தில் இருக்கும் முருகனும் ஒன்றே.

குன்றுதோரும் குமரன் இருப்பான் என்பார்கள். மலைகள் கொண்ட பகுதிக்கு பண்டையத் தமிழர்கள் குறிஞ்சி என பெயர் சூட்டினர். அதனால்தான் முருகன் குறிஞ்சி நிலக் கடவுள் என்றழைக்கப்படுகிறார்.

முருகப் பெருமானின் கரங்கள் 12 அதுபோல் தமிழில் உயிரெழுத்தும் 12. முருகனின் 18 கண்களைப் போல் மெய்யெழுத்தும் 18. முருகனை முழு முதற்கடவுளாக கொண்டு வாழ்ந்த புலவர்கள் அவனை வாழ்த்திப் பாடும்போது அறிவை தமிழாக வடித்தனர். தங்களை சுற்றி நடக்கும் விசயங்களை ஆராய்ந்து உணர்ந்து அதன் மூலம் பெற்ற அறிவை தங்கள் பாடல்களில் புகுத்தினர்.

அவ்வகையில் ஷண்முக கவசத்தை எழுதிய பம்பன் சுவாமிகள் இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த உன்னத துறவி என போற்றப்படுகிறார். அருணகிரிநாதரை குருவாகக் கொண்ட இவரை இரண்டாவது அருணகிரி என அழைப்பதும் உண்டு. முத்தைத் தரு என்ற தொடக்கத்தை அருணகிரியாருக்கு வழங்கியதைப் போல், கங்கையை சடையில் பரித்து என்ற தொடக்கத்தை முருகன் பம்பன் சுவாமிகளுக்கு வழங்கியதாகக் கூறப்படுகிறது.

பம்பன் சுவாமிகளின் தமிழ் ஞானம் அளவிடற்கறியது. முருகனே தமிழ், தமிழே முருகன் என இறண்டரக் கலந்த இந்த சுட்சுமத்தைப் பாடியவர் இவர்.

இவரின் ஷண்முக கவசம் 30 செய்யுள்களைக் கொண்டது. ஒவ்வொரு பாடலின் முதல் எழுத்து உயிர் எழுத்தும் மெய் எழுத்தும் கொண்டவை. அந்தப் பாடல் வரிகளில் முதல் 12 உயிர் எழுத்தில் தொடங்கும்.


அண்டமா யவனி யாகி யறியொணாப் பொருள தாகித்

தொண்டர்கள் குருவு மாகித் துகளறு தெய்வ மாகி

எண்டிசை போற்ற நின்ற வென்னரு ளீச னான

திண்டிறற் சரவ ணத்தான்றினமுமென் சிரசைக் காக்க


13- ஆவது பாடல் வரி வல்லினத்திலும், 14 - ஆவது பாடல்வரி இடையினத்திலும் ஒன்றன் பின் ஒன்றாக பாடப்பட்டுள்ளது. 23 -ஆவது பாடல் வரி தொடக்கம் மெல்லினத்தில் தொடங்கும்.

திருக்குறளில் கடைசிக் குறல்

'ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம்

கூடி முயங்கப் பெறின்.' (1330)


தமிழ் சொற்களில் கடைசிச் சொல்லான 'ன்' என்ற சொல்லில் முடிய ஷண்முக கவசத்தின் கடைசிப் பாடல் 'ன' என்ற சொல்லில் தொடங்குகிறது.


இனமெனத் தொண்ட ரோடு மினக்கிடுஞ் செட்டி காக்க

தனிமையிற் கூட்டந் தன்னிற் சரவண பவனார் காக்க

நனியனு பூதி சொன்ன நாதர்கோன் காக்க வித்தைக்

கனிவொடு சொன்ன தாசன் கடவுடான் காக்க வந்தே


ஷண்முக கவசத்தில் இடம்பெற்றுள்ள் அனைத்து பாடல்களும் காக்க என்ற சொல்லிலே முடிவடைகிறது. முருகன் என்பவன் மானுடர்களை காத்து நிற்பவன் போல் அறிவே உருவான தமிழ் மனிதனைக் காக்கிறது எனப் பொருள்படுகிறது.

ஷண்முக கவசத்தை தினமும் ஒரு வேளையாவது பாடினால் தீராத நோய் தீரும், சங்கடங்கள் விலகும் என்று கூறப்படுகிறது. இதற்கு காரணம் நாம் இந்தப் பாடல்களை பக்தி பாடல்களாக மட்டும் காணாமல் அதில் பொதிர்ந்திருக்கும் உண்மையை உணர்ந்து பாட வேண்டும். மனிதனை பக்குவப்படுத்துவது இந்தப் பாடல்களில் நிறைந்து கிடைக்கும் உண்மைகளே. உலக பற்றை துறந்து இந்த உண்மைகளின் மேல் பற்று கொண்டால் அண்டமாய், அணுவாய் அறிவாய் இருக்கும் சூட்சுமத்தை அடைய முடியும்.

புகைப்பட மூலம்: pambanswamigal.org