இந்துக்கள் நாள் நட்சத்திரங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பத்துண்டு. தை மாதத்தின் பூசம் நட்சத்திரம் போல் மாசி மாதம் மகம் நட்சத்திரம் பிரசித்தி பெற்றது. என்னதான் மாதந்தோறும் மகம் நட்சத்திரம் வந்தாலும் மாசி மாதத்தில் பெளர்ணமி நாள் வரும் மகம் நட்சத்திரம் தனித்தன்மை பெற்றதாக நம்பப்படுகிறது. இந்நாளில் பல திருவிழாக்கள் ஆங்காங்கே கொண்டாடப்படுகிறன.

1. சன்னாசி மலை ஆண்டவர் திருவிழா




மலாக்கா செங் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு சன்னாசிமலை ஆண்டவர் ஆலயத்தில் நடைப்பெறும் மாசிமகத் திருவிழா மிகவும் பிரசித்திப்பெற்றது.

நாட்டுக்கோட்டை செட்டியார்கள் நிர்வகிப்பில் முருகக் கடவுளுக்காக இத்திருவிழா நடத்தப்படுகிறது. தங்க முலாம் பூசப்பட்ட முருகச்சிலை ஸ்ரீ பொய்யாத விநாயக கோவிலுக்குச் சொந்தமான வெள்ளி ரதத்தில் ஊர்வலமாக சன்னாசி மலைக்கு கொண்டு செல்லப்படுகிறது. பக்தர்கள் புடைசூழ தெருவெங்கும் தண்ணீர் பந்தல்களுடன் ஊர்வலம் மிக விமரிசையாக நடைப்பெறும்.

2. ஸ்ரீ சிங்கமுக காளியம்மன் தெப்ப திருவிழா




பினாங்கு பலேக் புலாவ் (தெலுக் பஹாங் சாலையில்) அமைந்துள்ள ஸ்ரீ சிங்கமுக காளியம்மன் ஆலயத்தின் மாசிமக தெப்ப திருவிழாவில் ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர்.

இக்கோவிலின் மாசிமகத் திருவிழாவில் சிங்கமுக காளியம்மன் ரதம் மலர்களாலும் விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டு தெலுக் பஹாங் கடல் பகுதில் மிதக்க விடப்படுகிறது. இந்த அழகு காட்சியை வார்த்தைகளால் விவரித்து விட முடியாது. பினாங்கைப் பொறுத்தவரை தைப்பூசத்தை அடுத்து மிகப்பெரிய இந்து திருவிழாவாக இது கருதப்படுகிறது.

3. கும்பகோணத்தில் மாசிமகத் திருவிழா




12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பக்கோணத்தில் கும்பேஸ்வரர் கோவிலில் மாசிமகத் திருவிழா மகாமகம் என்ற பெயரில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

அந்நாளில் யமுனை, சிந்து, காவேரி, சரஸ்வதி, கோதாவரி, நர்மதா போன்ற 12 நதிகள், மக்கள் கழுவிய பாவச்சுமைகளை அகற்றி புனிதம் பெற இங்கு வருவதாக நம்பப்படுகிறது. இதுவே கும்பமேள என்று வட இந்தியாவில் கொண்டாடப்படுகிறது.

4. திருச்செந்தூர் முருகன் மாசிமகத் திருவிழா




இரண்டாம் படைவீடான திருச்செந்தூரிலும் மாசிமகம் 12 நாட்களுக்குக் கொண்டாடப்படுகிறது. நாள்தோறும் அலங்கரிப்பட்ட வாகனத்தில் நடைபெறும் வீதி உலா இங்குள்ள சிறப்பம்சம்.

முதல்நாள்- கொடியேற்றம்
இரண்டாம் நாள் - சிங்க சர்ப கேடயம்
மூன்றாம் நாள் - தங்கக் கிடா வாகனம்
நான்காம் நாள் - வெள்ளி யானை வாகனம்
ஐந்தாம் நாள் - தங்க மயில் வாகனம்
ஆறாம் நாள் - கோ ரத ஊர்வலம்
ஏழாம் நாள் - பிரதான உற்சவர் தங்க ரத ஊர்வலம்
எட்டாம் நாள் -பிரதான உற்சவர் வெள்ளிச்சப்பரத்தில் ஊர்வலம்
ஒன்பதாம் நாள் - தங்க கையிலாய பர்வத வாகனம்
பத்தாம் நாள் - திருவிழா தேரோட்டம்
பதினொன்றாம் நாள் - தெப்பத்திருவிழா
இறுதி நாள் - நிறைவு

இந்த ஆண்டின் உங்கள் மாசிமக திருவிழா கொண்டாட்டம் குறித்த புகைப்படங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

நன்றி (Image credit) : தினமலர், மாலைமலர் & Sherwyndkessler Event Photography