தைப்பூசம் முருகனுக்கு உகந்த நாள் ஆகும். இத்திருநாளில் பக்தர்கள் விரதம் இருந்து நேர்த்திக் கடனை நிறைவேற்றுவர்.

மார்கழி மாதமே துளசி மாலை அணிந்து முருகனுக்கு விரதம் இருக்கத் தொடங்குவர். இந்த விரதம் இருக்கும் நாட்களில் கந்தசஷ்டி கவசம், சண்முக கவசம், திருப்புகழ் போன்றவற்றை படிப்பர். முருகனின் நினைவாகவே இருப்பர்.

காலையில் எழுந்து நீராடி, முருகனின் துதி பாடும் பக்தர்கள், பாலும் பழமும் மட்டுமே உணவாகக் கொள்வர். நல்ல சிந்தனை, உயர்ந்த எண்ணங்கள், சிறந்த செயல்பாடுகள் கொண்டிருக்க வேண்டும். இதுவும் விரதத்தில் ஒரு பங்குதான்.

முருகப் பெருமானின் அருளை அடைவதற்கு ஆறுபடை வீடுகளுக்குப் பக்தர்கள் பாத யாத்திரை செல்வார்கள். தாங்கள் நினைத்த காரியங்கள் நிறைவேறவும், முருகனின் அருளால் நிறைவேறிய காரியங்களுக்கு நன்றிக்கடன் செலுத்தக் காவடி எடுப்பர். முடிக் காணிக்கை செய்வர்.

மேலும், இங்கே மலேசியாவில் உள்ள திருத்தலங்களில் ஆயிரக்கணக்காகப் பக்தர்கள் தங்களின் நேர்த்திக் கடனை நிறைவேற்றுவர். பல வண்ணக் காவடிகளைக் காணலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரைப் பால் குடம் ஏந்தி முருகனை வேண்டி வருவது காணக் கிடைக்காத காட்சியாகும்.


Picture credit: m.dinakaran.com