Skip to main content

Hindu Science

ஓம் ஸ்ரீ சிவ சக்தி அங்காளம்மாள் பரமேஸ்வரி தேவஸ்தானம்: அற்புதங்கள் பல கொண்ட திருத்தலம்

ஓம் ஸ்ரீ சிவ சக்தி அங்காளம்மாள் பரமேஸ்வரி தேவஸ்தானம்

ஆடி மாதம் தொடங்கியுள்ள இந்த புனித  நேரத்தில்,  அம்மன் கோவில்களின்  அதிசய வரலாற்றை அறிந்து கொள்வதற்கு இதைவிட சிறந்த தருணம் இருக்க முடியுமா என்ன?

பேராக், தம்புனில் அமைந்துள்ள ஓம் ஸ்ரீ சிவ சக்தி அங்காளம்மாள்  பரமேஸ்வரி தேவஸ்தானம், தலைமுறை தலைமுறையாக பக்தர்களின்  வாய்மொழியாக  பரவிவந்த ஓர் அற்புதமான வரலாற்றைக் கொண்டுள்ளது.

இன்று, இந்த ஆலயம் மலேசியாவிலிருந்து மட்டுமல்லாமல், அண்டை  நாடான  சிங்கப்பூரிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசிக்கும் ஒரு புகழ் பெற்றசக்தி திருத்தலமாக விளங்குகிறது. ஆனால், இந்த ஆலயம் இன்று  இருக்கும் பிரமாண்டமான வடிவத்தை அடைவதற்கு முன்பு, அதன்  தொடக்கம்  மிகவும் எளிமையானதாக இருந்துள்ளது. 

கோவில் தலைவர் திரு. மகேந்திரன் பகிர்ந்து கொண்டதன்படி, இந்த  ஆலயத்தின் வரலாறு 1970-களில்  தொடங்குகிறது.  அப்போது திரு.  முனுசாமி  மற்றும் அப்பகுதியில்  சுரங்கத் தொழிலில் ஈடுபட்டிருந்த  இந்திய  சமூகத்தினர்  இங்கு வாழ்ந்து வந்தனர்.

 

 

அந்த காலத்தில் முதன் முதலாக வழிபடப்பட்ட தெய்வம்,  செதுக்கப்பட்ட  சிலையாக இல்லை.  மாறாக,  பேச்சியம்மன் தானாகவே சுயம்பு  வடிவமாக  தோன்றி இத்தலத்தில் அருள்பாலித்ததாக நம்பப்படுகிறது. அச்சுயம்பு வடிவத்தை திரு.முனுசாமி கண்டெடுத்ததாகவும், இன்றும் இப்போதிருக்கும் பேச்சியம்மன் சிலைக்குப் பின் அது பத்திரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் மகேந்திரன் தெரிவித்தார். 

மனிதர்களால் உருவாக்கப்படாமல்,  இயற்கையாகவே  வெளிப்பட்ட இந்த  தெய்வீகத் தோற்றமே இத்தலத்தின் மகிமையாக கருதப்படுகிறது.

ஆரம்ப நாட்களில்,  பக்தர்கள்  சிறுகுடிசை   போன்ற  ஓர் ஆலயத்தில் பேச்சியம்மனை வழிபட்டு வந்துள்ளனர்.  நாளடைவில், அம்மன் மீது மக்களின் பக்தியும் நம்பிக்கையும் அதிகரித்ததால்,  ஆலயமும் படிப்படியாக  வளர்ச்சி பெற்றது. அதன் பின்னரே, அங்காளம்மன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு, ஆலயம் "ஓம் ஸ்ரீசிவ சக்தி அங்காளம்மாள் பரமேஸ்வரி தேவஸ்தானம்" என்ற பெயரில் பரவலாக அறியப்பட்டது. இந்த ஆலய வரலாற்றில் இன்றும்   பக்தர்களால் பகிரப்படும் ஓர் அற்புதமான நிகழ்வு உள்ளது.

ஒரு பக்தரின் கனவில் அம்மன் அருள்வாக்கு அளித்து, "நான் இந்த இடத்திலேயே இருக்கிறேன். எனக்காக  இங்கு ஓர் ஆலயம் அமைக்க வேண்டும்" என்று கூறியதாக கோவில் தலைவர் நினைவுகூர்ந்தார்..

 

 

 

அந்த தெய்வீகக் கட்டளையை இறைவியின் அருளாக  ஏற்றுக்கொண்ட செல்லையா, முனியாண்டி, வேணுகோபால், பலருடன் ஒன்றிணைந்து ஆலயத்தை அமைக்கும் பணியில் ஈடுபட்டனர். மிகச் சாதாரணமாக   தொடங்கிய இந்த வழிபாட்டு இடம், மக்களின் அசைக்க முடியாத பக்தி, ஒற்றுமை மற்றும் அர்ப்பணிப்பால் ஆயிரக்கணக்கானோர் தரிசிக்கும் ஆன்மீகத் தலமாக வளர்ந்தது. 

பின்னர், காலப்போக்கில் பல்வேறு மாற்றங்களைக் கண்டு. இன்று பக்தர்களின் கவனத்தை ஈர்க்கும், 31 அடி உயரமான அங்காளம்மன் திருவுருவ சிலையையும் கொண்டுள்ளது. 

அந்த அற்புதச் சிலை எவ்வாறு உருவானது என்று கேட்டபோது, தலைவர் கூறியதாவது:

"ஆலயத்தின் முன்புறத்தில் உள்ள 31 அடி உயர அங்காளம்மன் சிலை, மலேசியாவைச் சேர்ந்த சிற்பி பிரபாகரன் மற்றும் இந்தியாவிலிருந்து வந்த திறமையான சிற்பிகளின் கைவண்ணத்தில் உருவானது. இந்தப் பணியின் தொடக்கமாக மேல்மலையனூரிலிருந்து கொண்டுவரப்பட்ட புனித மண் சிறப்பு பூஜைகளுடன் வழிபட்டு பயன்படுத்தப்பட்டது. இதற்கென பெரிய திட்டங்கள் எதுவும் இல்லை.  அனைத்தும் அம்மனின் அருளால் நடந்தது. அவளது திருவுளத்தை நிறைவேற்றுவதற்கான கருவிகளாக மட்டுமே நாங்கள் இருந்தோம்."

இன்று இந்த ஆலயம் வெறும் வழிபாட்டுத் தலமாகமட்டும் இல்லாமல், எண்ணற்ற பக்தர்களின் நம்பிக்கையின் மையமாகவும் விளங்குகிறது. 

ஆலய வளாகத்தில் ஏராளமான பக்தர்கள், தங்கள் வேண்டுதல்களின் அடையாளமாக கயிறுகளைக் கட்டிச் செல்கின்றனர். சிலர் கல் உப்பு உள்ளிட்ட பல்வேறு காணிக்கைகளைச் சமர்ப்பித்து, தங்கள் வாழ்க்கையில் உள்ளதடைகள், கண் திருஷ்டி மற்றும்துன் பங்கள் நீங்க நம்பிக்கையுடன் பிரார்த்தனை செய்கின்றனர்.

 

 

கோவில் தலைவரின் கூற்றுப்படி, தங்களது வேண்டுதல்கள்  நிறைவேறிய பின்னர் பலரும், மீண்டும் வந்து நன்றியுணர்வுடன் தங்க அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள்.

"பல ஆண்டுகளாக வேலை கிடைக்காமல் தவித்தவர்கள், இங்கு வந்து வேண்டிய பிறகு நல்ல வேலை கிடைத்ததாகக் கூறி திரும்பி வந்திருக்கிறார்கள். இன்னும் பலரும் தங்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட நல்ல மாற்றங்களை அம்மனின் அருளாக பார்க்கிறார்கள்," என்றார்.

அதில் ஒரு சம்பவம் கோவில் வரலாற்றில் என்றும் மறக்க முடியாததாக உள்ளது:

சில ஆண்டுகளுக்கு முன்பு, பக்கவாதத்தால் நடக்க முடியாத  நிலையில் இருந்த ஒருவர் அம்மனை நாடி வந்துள்ளார். மன முருகி பிரார்த்தனை செய்து,

"நான் மீண்டும் நடக்க ஆரம்பித்தால், இந்த ஆலயத்திற்கு  என்னால் முடிந்த உதவியை செய்வேன்," என்று வேண்டினார்.

காலப்போக்கில் உடல்நலம் பெற்று மீண்டும் நடக்கத் தொடங்கிய அவர், தனது வேண்டுதல் நிறைவேறியதை உணர்ந்து, அம்மனுக்கு அளித்த வாக்கை மறக்காமல் ஆலயத்தின் மேற்கூரையை அமைக்கும் பணிக்கான செலவை ஏற்று நிறைவேற்றினார். இன்று வரை  அந்த  நிகழ்வு, பக்தர்களால் நன்றியுடன் நினைவுக் கூரப்படுகிறது.

மற்றொரு பக்தையின் வாழ்க்கையும் பலருக்கு நம்பிக்கையை அளிக்கிறது.

சுமார் 15 ஆண்டுகளாக, குழந்தை பாக்கியம் இல்லாமல் தவித்த அவர்,  பேச்சியம்மனை மனமார வேண்டிக்கொண்டார். அதன்பின், ஓராண்டுக்குள் ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுத்தார். அந்த அனுபவத்தை  அவர் அம்மனின் அருளாகவே கருதுகிறார்.

இன்று ஓம் ஸ்ரீ சிவ சக்தி அங்காளம்மாள் பரமேஸ்வரி தேவஸ்தானத்திற்கு  வருபவர்கள் பல்வேறு காரணங்களுக்காக வருகிறார்கள். சிலர் தங்கள் துயரங்களை இறக்கிவைக்க, சிலர் நேர்த்திக்கடனை நிறைவேற்ற, சிலர்  மன  அமைதியைத் தேடி.

ஆனால், அவர்கள் அனைவரும் ஒரே உணர்வுடன் திரும்பிச் செல்கிறார்கள். அது ஒரு கோவிலை தரிசித்த உணர்வுமட்டும் அல்ல...

தாயாக அரவணைத்து, தன்னை நாடி வரும் ஒவ்வொருவரையும்  கருணையுடன் காத்து அருள் புரியும் அன்னையின் சந்நிதியை உணர்ந்த ஆனந்தமும் அது.

You may be interested in

Ready stock lotus design indian saree

Ready stock lotus design indian saree

Indian Wedding Forehead Netti Pattam & Hand Wrist Pattam Gold Plated Traditional Bridal Ceremony Set

Indian Wedding Forehead Netti Pattam & Hand Wrist Pattam Gold Plated Traditional Bridal Ceremony Set

Ethnic Retro Corful Peacock Jhumka Earrings Womens Indian Jewelry Flower Gold Bell Tassel White Pearl Earrings

Ethnic Retro Corful Peacock Jhumka Earrings Womens Indian Jewelry Flower Gold Bell Tassel White Pearl Earrings

Royal Heritage Embroidered Anarkali Gown for Women | Premium Festive Wear by RANGOLI BAZAAR

Royal Heritage Embroidered Anarkali Gown for Women | Premium Festive Wear by RANGOLI BAZAAR

Bollywood Style 1 Pair Of Earrings + 1 Necklace Vintage Jewelry Set Retro Design Inlaid Gemstone Match Daily Outfits Party Accessories

Bollywood Style 1 Pair Of Earrings + 1 Necklace Vintage Jewelry Set Retro Design Inlaid Gemstone Match Daily Outfits Party Accessories