ஒரு சிறிய கடற்கரை குடிசையாக இருந்த பங்கோர் ஸ்ரீ த்ரகாளியம்மன் ஆலயம், இன்று மலேசியா, சிங்கப்பூர், இந்தியா மட்டுமல்லாது பல நாடுகளிலிருந்தும் பக்தர்களை ஈர்க்கும் சக்தி ஸ்தலமாக விளங்கி வருகிறது.
இன்று சுற்றுலாப் பயணிகளின் சொர்க்கமாக அறியப்படும் பங்கோர் தீவு, ஒரு காலத்தில் அடர்ந்த காடுகளாலும், அலைமோதும் கடலாலும் சூழப்பட்டிருந்தது. அப்போது, அங்கு வாழ்ந்த தமிழர்கள் பெரும்பாலும் மீன்பிடித்தல் மற்றும் தோட்டத் தொழிலில் ஈடுபட்டு வந்தனர்.
கடலுக்குச் செல்லும் ஒவ்வொரு நாளும் அவர்கள் பாதுகாப்பாக திரும்பி வருவார்களா என்பது கூட உறுதியாக இல்லாத காலம் அது. அப்படிப்பட்ட சூழலில்தான் 1922-ஆம் ஆண்டு, இன்று நூற்றாண்டை கடந்துள்ள ஸ்ரீ பங்கோர் பத்ரகாளியம்மன் ஆலயத்தின் வரலாறு தொடங்குகிறது.
இந்த ஆலயத்தின் வரலாற்றை அறிந்து கொள்ள, ஆலயத்தின் தற்போதைய தலைவர் திரு. தாஸ் அவர்களை ஆஸ்ட்ரோ உலகம் தொடர்புகொண்டது. ஆலயத்தின் தோற்றம் முதல் பக்தர்களின் அனுபவங்கள் வரை பல சுவாரஸ்யமான தகவல்களை அவர் பகிர்ந்து கொண்டார்.
ஆலய வரலாற்றின்படி, திரு. இருநாப்ப நாடார் என்பவரின் கனவில் பத்ரகாளியம்மன் அருள்பாலித்ததாக கூறப்படுகிறது.

"மகனே... இந்தக் கடற்கரையில் எனக்காக ஓர் ஆலயத்தை கட்டு. இனி என் திருநாமம் இங்கு ஒலிக்கும். கடலுக்குச் செல்லும் அனைவரையும் நான் காப்பாற்றுவேன்."
அம்மன் அருளிய இந்த தெய்வீக உத்தரவு அவரை ஆழமாகத் தொட்டது. மறுநாளே அப்பகுதியில் வாழ்ந்த தமிழர்களை ஒன்றிணைத்து, கடற்கரை ஓரத்தில் ஒரு எளிய குடிசை ஆலயத்தை அமைத்தார். தமிழ்நாட்டிலிருந்து கொண்டு வரப்பட்ட பத்ரகாளியம்மனின் திருவுருவம் பிரதிஷ்டை செய்யப்பட்டு முதல் பூஜை நடைபெற்றது.
அந்த எளிய குடிசை ஆலயமே இன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசிக்கும் புனித தலமாக வளர்ந்துள்ளது. காலப்போக்கில் பங்கோர் தீவும் வளர்ச்சி அடைந்தது. 1924-ஆம் ஆண்டு திரு. சுடலைமுத்து மற்றும் திரு. கார்த்தலிங்கம் ஆகியோரின் தலைமையில் ஆலயத்தின் முதல் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.
அன்று காலை வானம் தெளிவாக இருந்ததாகவும், கும்பாபிஷேகம் நிறைவடைந்த உடனே மழை பெய்து முழு கிராமத்தையும் குளிர்வித்ததாகவும் அறியப்படுகின்றது. அந்த மழையை, "அம்மன் ஆலயத்தை ஏற்றுக் கொண்டதற்கான அருள் அறிகுறி" என்று பக்தர்கள் நம்பினர்.

அன்றிலிருந்து வெள்ளிக்கிழமை பூஜைகள், மாதாந்திர பூஜைகள் மற்றும் வருடாந்திர திருவிழாக்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
காலம் மாறினாலும், அம்மனின் மீது பக்தர்களின் நம்பிக்கை மட்டும் ஒருபோதும் மாறவில்லை.
ஆலயத்தை நாடி வரும் பக்தர்களின் அனுபவங்களைப் பகிர்ந்த திரு. தாஸ், பலர் தங்களது வாழ்க்கையில் நிகழ்ந்த அற்புதங்களை ஆலயத்திற்கு வந்து பகிர்ந்து கொள்வதாக தெரிவித்தார்.
"10 முதல் 11 ஆண்டுகள் குழந்தை பாக்கியம் இல்லாமல் தவித்த தம்பதிகள் அம்மனை வேண்டி பின்னர் குழந்தை பெற்றுள்ளனர். பல ஆண்டுகளாக வேலை கிடைக்காமல் இருந்தவர்கள் நல்ல வேலை பெற்றதாக கூறியுள்ளனர். மருத்துவர்களால் குணப்படுத்த முடியாது என கூறப்பட்ட நோய்களிலிருந்தும் அம்மன் அருளால் மீண்டதாக பலர் வந்து நன்றி செலுத்தியிருக்கிறார்கள்," என்று அவர் கூறினார்.
இந்த ஆலயத்திற்கு இந்தியர்கள் மட்டுமல்லாமல், சீன சமூகத்தைச் சேர்ந்த ஏராளமான பக்தர்களும் பத்ரகாளியம்மனை வழிபட வருகின்றனர். தங்களது வேண்டுதல்கள் நிறைவேறியப் பிறகு நேர்த்திக்கடனை செலுத்த மீண்டும் ஆலயத்திற்கு வருவது வழக்கமாக இருப்பதாகவும் திரு. தாஸ் தெரிவித்தார்.
இந்த ஆலயத்தின் மிகப்பெரிய ஆன்மிக நிகழ்வுகளில் முக்கியமானது மாசி மகம் திருவிழா.
பத்ரகாளியம்மனின் அருள் மிகுந்த நாளாக கருதப்படும் மாசி மகத்தை முன்னிட்டு, மலேசியா முழுவதிலிருந்தும் மட்டுமல்லாமல் இந்தியா, சிங்கப்பூர் உள்ளிட்ட பல நாடுகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கோர் தீவிற்கு வருகை தருகின்றனர்.
மூன்று நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் கடல் பூஜை, தீச்சட்டி எடுத்தல், காவடி, கரகம், அன்னதானம் உள்ளிட்ட பல்வேறு ஆன்மிக நிகழ்வுகள் கோலாகலமாக நடைபெறும்.
தங்களது வேண்டுதல்கள் நிறைவேற வேண்டும் என்பதற்காக பக்தர்கள் தீச்சட்டி, காவடி, கரகம் மற்றும் அலகு குத்துதல் போன்ற நேர்த்திக்கடன்களை பக்தி உணர்வுடன் மேற்கொள்கின்றனர்.

ஆடி மாதமும் இந்த ஆலயத்தில் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
அம்மனுக்கே உரிய மாதமாகக் கருதப்படும் ஆடி முழுவதும் வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். பெண்கள் மஞ்சள், குங்குமம், வளையல்கள் சமர்ப்பித்து குடும்ப நலன், ஆரோக்கியம் மற்றும் வளமான வாழ்க்கைக்காக பிரார்த்தனை செய்கின்றனர். கூழ் ஊற்றுதல் உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக்கடன்களும் இந்த மாதத்தில் நடைபெறுகின்றன.
ஒரு காலத்தில் சில குடும்பங்களின் நம்பிக்கையாக இருந்த இந்த ஆலயம், இன்று பங்கோர் தீவின் மிக முக்கியமான ஆன்மிக அடையாளங்களில் ஒன்றாக திகழ்கிறது.
இது ஒரு கோவில் மட்டுமல்ல. கடலையே வாழ்க்கையாகக் கொண்ட மீனவ குடும்பங்களின் நம்பிக்கை. புலம்பெயர்ந்த தமிழர்களின் அடையாளம். நூற்றாண்டுக்கும் மேலாக பக்தர்களை அரவணைத்து வரும் தாயின் அருளிடம்.
1922-ஆம் ஆண்டு அம்மன் அளித்த அந்த ஒரு வாக்குறுதியை பக்தர்கள் இன்றும் மனதில் நிறுத்திக்கொள்கிறார்கள்.
"நான் இருக்கிறேன்... உங்களை ஒருபோதும் கைவிட மாட்டேன்."
Image Credit : ~𝓜𝐶~ @mcsunshine073 & மகமாயி துணை @sarvamum_avale