சிவராத்திரிக்கு கண் விழிப்பது மிகவும் நல்லது என்று கேள்விப்பட்டிருப்போம். அதற்குள்ளும் ஒரு மகத்துவம் ஒளிந்திருக்கின்றது.

சிவராத்திரி அன்று கண் விழித்திருந்து விரதமிருந்து இறைவனை வணங்கும்போது முழுமையான இறைவன் அருள் கிடைக்கும், நினைத்த காரியம் நடக்கும் என்பது நம்பிக்கை.

விரதம் கடைப்பிடிப்போர் முதல்நாள் ஒரு பொழுது உணவருந்தி சிவராத்திரியன்று காலையில் குளித்து சிவ சிந்தனையுடன் கண்விழித்திருந்து நான்கு கால வழிபாடு செய்யவேண்டும்.

அடுத்தநாள் காலையில் தீர்த்தமாடி, கடவுள் தரிசனம் செய்து விரதத்தை நிறைவு செய்தல் வேண்டும். சிவராத்திரிக்கு மறுநாள் சிவபுராணம் படித்தோ அல்லது கேட்டோ, தங்களின் பகல் பொழுதைக் கழிக்க வேண்டும்.

இதுவே முறையான சிவராத்திரி வழிப்பாடு என்று சொல்லப்படுகிறது. சிவராத்திரி என்பது வருடத்திற்கு ஒருமுறை ஆணவத்தினால் ஏற்படும் நம் அறியாமையை எண்ணிப் பார்க்கின்ற ஒரு நாளாய் அமைகின்றது.

ஆணவத்தினால் நாம் செய்கின்ற அன்பில்லாச் செயல்களையும் வார்த்தைகளையும் எண்ணங்களையும் எண்ணிப்பார்த்து அவற்றைச் சரிப்படுத்துவதற்குறிய வழிவகைகளை ஆராயும் ஒரு நாளாக இது அமையட்டும்.

இறைவனை வழிபட்டு, அவர் திருவருளை வேண்டி நின்று, கண் விழிப்பதோடு மட்டுமல்லாமல் நம் உயிரினை விழிப்படையச் செய்யும் நாளாகவும் விளக்குகின்றது.

இவ்வளவு சிறப்புக்களையும் உண்மைகளையும் உணர்த்தும் சிவராத்திரியை ஏற்ற முறையில் உணர்ந்து அணுசரிப்பது அவசியம்.

Photo Credit: Hindustantimes, Zee News, Universal Divine Art, Samayam Tamil