தமிழர்கள் குடிகொண்டிருக்கும் அனைத்து இடங்களிலும் தைப்பூசத் திருவிழா மிக விமரிசையாகக் கொண்டாடப்படும். கடல் கடந்து சென்ற தமிழர்கள் தங்களுடன் எடுத்துச் சென்றது இரண்டே விஷயம்தான். ஒன்று எதிர்ப்பார்ப்பு மற்றொன்று நம்பிக்கை. தங்களுடைய வாழ்வு செழிக்க வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்போடு இருந்தவர்கள், பல விஷயங்களில் தன்னுள் வேரூன்றிருந்த நம்பிக்கையை வாழ்வின் பிடிமானமாகக் கொண்டிருந்தனர்.

அதில் இறைநம்பிக்கை முக்கியப் பங்கு வகிக்க, இந்த நம்பிக்கையை தன்னுடைய அடுத்த சந்ததியினரின் மனதிலும் விதைத்தனர். பல தலைமுறையினரைக் கடந்து வந்துள்ள இந்த நம்பிக்கையின் அடிப்படையில் நாம் பல விழாக்களை விமரிசையாக கொண்டாடினாலும் தைப்பூசம் என்றுமே தனித்திருக்கும் ஒரு முக்கியத் திருவிழா.

இந்த தைப்பூசத் திருவிழாவை நினைவு கொள்கையில் நம் நினைவில் உதிக்கும் 5 முக்கிய விஷயங்கள் என்ன என்று பார்ப்போம்.

1. ஒன்றுக்கூடல்

இந்த மலையகத்தின் மக்கள் தொகையில் 9% இந்தியர்கள் இருக்க இதில் 89% இந்தியர்கள் இந்துக்களாக இருக்கின்றனர். நாம் அனைவரும் ஒரு சேர ஓர் இடத்தில் கூடி, கருணை வடிவான கந்தனை நினைந்து வழிபடும் அதேவேளையில் ஒருத்தரை ஒருத்தர் பார்த்து முகம் மலர்வதும், நட்பு பாராட்டுவதும் இங்கேதான். மலேசிய முழுவதும் தைப்பூசத்தை விமரிசையாக கொண்டாடும் திருத்தளங்களில் பத்துமலை ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி ஆலயம், பினாங்கு பாலதண்டாயுதபானி ஆலயம், ஈப்போ கல்லுமலை ஆலயம் மற்றும் சுங்கை பட்டாணி ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி ஆலயம் முக்கிய தளங்களாக அமைகின்றன. இந்த தைப்பூசத் தினத்தன்றுதான் பக்தி மார்க்கத்தின் அடிப்படையில் ஒன்று கூடும் இந்தியர்கள், ஒவ்வொருவருக்குள் இருக்கும் இந்தியர் என்ற உறவு பாலத்தையும் பலப்படுத்துகின்றனர். இது நம் ஒற்றுமையின் பலத்தையும் நம் நம்பிக்கையின் தொன்மையையும் உறுதிபடுத்துகின்றது; உலகிற்கு பறைசாற்றுகின்றது.

2. பொது விடுமுறை

இந்தியர்களின் பெருநாட்களில் தீபாவளிக்கு அடுத்து பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ள தினம் தைப்பூசமே. இந்தியர்கள் அதிகளவில் வசிக்கும் மாநிலங்களான சிலாங்கூர், பேராக், பினாங்கு, ஜொகூர், நெகிரி செம்பிலான் தைப்பூச தினத்தை பொது விடுமுறையாக அறிவித்தது, நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்களுக்கு உறுதிணையாக இருக்கும் இந்த பொது விடுமுறையை கூட்டரசு பிரதேசமான புத்ரா ஜெயாவும் ஆதரித்து பிரகடனப்படுத்தியது. தற்பொழுது 300,000 இந்தியர்களைக் கொண்டுள்ள கெடா மாநிலம் இவ்வருடம் இந்த பட்டியலில் சேர்ந்துள்ளது. இந்த பொது விமுறையானது 48 நாட்கள் விரதம் இருக்கும் பக்தர்கள் மனத் திருப்தியுடன் முருகனுக்கு நேர்த்திக் கடனை செலுத்த வகை செய்யும் வேளையில் இதே மனத்திருப்தியை வரும் காலங்களில் பிற மாநில பக்தர்களும் அனுபவித்தால் சிறப்பான அம்சமாக அமையும்.

3. மின்சார ரயில் சேவை (கே.டி.எம்)

தைப்பூசத்தை முன்னிட்டு கே,டி.எம் தன்னுடைய சேவையை பிரத்தியேகமாக நீட்டித்துள்ளது. இவ்வருடம் ஜனவரி 31 தொடங்கி பிப்ரவரி 4 வரை 5 நாட்களுக்கு 24 மணிநேர சேவையை அறிவித்துள்ளதால் பலர் நிம்மதி பெருமூச்சுவிட்டுள்ளனர். பத்துமலை - கிள்ளான் துறைமுகம் மற்றும் ரவாங் - சுங்கை காடுட்டிற்கான இருவழி பயணத்தில் ஒவ்வொரு 15 மற்றும் 30 நிமிட இடைவெளியில் 334 முறை இந்த ரயில் சேவை கிடைக்கப் பெறும். மேலும் பயணிகளின் நேரத்தையும், பணத்தையும் மிச்சப்படுத்து வகையில் செந்துல் ( Sentul), பத்து கெந்தோன்மென் ( Batu Kentonmen), கம்போங் பாத்து ( Kampung Batu) , தாமான் வாஃயூ (Taman Wahyu) இரயில் நிலையங்களில் அமைந்துள்ள கார் நிறுத்துமிடம் இந்த 5 நாட்களுக்கு இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சேவையை பயணிகள் சரிவர பயன்படுத்திக் கொண்டால் தேவையில்லாத சிரமங்களைத் தவிர்க்கலாம்.

4. கார் நிறுத்துமிடம்

பொது போக்குவரத்து வசதிகள் பல இடங்களில் செய்து தரப்பட்டிருந்தாலும் பலர் தைப்பூச தினத்தன்று தங்களின் வசதிற்காக சொந்த வாகனத்தில் பயணிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். சிறுகுழந்தைகள் மற்றும் வயது முதிர்ந்தோர் கொண்ட குடும்பங்கள், தூரப் பயணத்தை மேற்கொண்டு தைப்பூசத்தை கொண்டாடுபவர்கள் பொது போக்குவரத்தை பயன்படுத்தில் சிரமத்தை எதிர்நோக்குகின்றனர். இதனால் சொந்த வாகனத்தை பயன்படுத்துவது தவிர்க்க முடியாத காரணமாக அமையும் வேளையில், பலர் ஓர் இடத்தில் கூடும்போது ஏற்படும் வாகன நெரிசல் மற்றும் கார் நிறுத்துமிடத்தில் சிரமத்தை எதிர்நோக்குவதும் தவிர்க்க முடியாத விளைவாக அமைகின்றது. வாகனமோட்டிகள் விவேகமாக செயல்பட்டால் மட்டுமே சுமூகமாக தைப்பூசத்தை கொண்டாட முடியும். பிற வாகனங்களுக்கு இடையூறாக இல்லாமல் வாகனத்தை நிறுத்துவதும்,, முறையான வாகன நிறுத்துமிடத்தை பயன்படுத்துவதும் இலகுவான தீர்வாக அமையும் என்பது உறுதி.

5. காவடிகள்

நேர்த்திக் கடனை செலுத்தத் தேவையான பொருட்களையும், நினைத்த விஷயங்கள் நடந்தேறின என்ற மனத்திருப்தியால் தங்களின் மனப்பாரத்தை இறக்கி வைக்கவும், கந்தனை நினைத்து அடி மேல் அடி வைத்து காவடியை சுமந்து செல்லும் இந்த இடும்பன்களின் பக்தியே தைப்பூசத்தின் உயிர்நாடி. கந்தனுக்கு பால் காவடி, பன்னீர் காவடி, புஷ்பக் காவடி என நேர்த்திக் கடனை செலுத்தும் பக்தர்கள் சில சமயங்கள் ஒரு படி மேலாக தாங்கள் நேசிக்கும் குறிப்பிட்ட குழுவின் சின்னத்தையோ, பொருட்களின் படங்களையோ வைத்து காவடிகளை அலங்கரிக்கின்றனர். கால ஓட்டத்திற்கேற்ப காவடிகளின் உண்மையான நோக்கமும் உருமாறிவிட்டது என்பது மறுக்கமுடியாத ஒன்று. நேர்த்திகடன் செலுத்தும் பக்தர்களின் பக்திநிலையின் வெளிப்பாட்டினை சரி அல்லது தவறு என வகைப்படுத்துவதைக் காட்டிலும் இந்த நிலையானது பொருத்தமானதா இல்லையா என்பதை கூர்ந்து கவனிப்பதே சிறப்பாக அமையும்.

தைப்பூசம் என்பது பல நிலையில் வேறுபட்டிருக்கும் மக்களுக்கு வெவ்வேறான அர்த்தங்களையும், அனுபவங்களையும், தந்தாலும் பக்தி என்ற வேரின் கீழ் ஒன்றுபடுத்துகின்றது. இந்த தைப்பூசத் திருவிழா முருகனுக்கு உகந்த நாளாக மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் பரவிக் கிடக்கும் இந்தியர்களின் அடையாளமாகத் திகழும் நன்னாள்.