தமிழ்க் கடவுள் முருகப் பெருமானின் வரலாறு பற்றி முதன் முதலாகத் தமிழில் படைக்கப் பெற்ற இலக்கியம் ‘திருமுருகாற்றுப் படை’ ஆகும்.
தமிழ்ப் புலவரான நக்கீரர், முருகனின் அருள் பெற்று இயற்றிய சங்க இலக்கியமான இதில், முருகப் பெருமான் கோவில் கொண்டுள்ள ஆறு படை வீடுகளைப் பற்றி தெளிவாகச் சொல்லப்பட்டுள்ளது..
1. திருப்பரங்குன்றம்
‘முதல் படை வீடு’ என்ற பெருமையை இது பெறுகின்றது. சூரபத்மனை அழித்து, தேவர்களைப் பாதுகாத்தார் முருகப் பெருமான். அவருக்கு தன் மகள் தேவ சேனாவை மணம் முடிக்க விரும்பினான் இந்திரன். முருகப் பெருமான் - தேவசேனா திருமணம் நிகழ்ந்த திருத்தலமே முதலாம் படை வீடாகிய திருப்பரங்குன்றம். திருப்பரங்குன்றத்தில் மலையைக் குடைந்து கர்ப்ப கிரபம் அமைக்கப் பெற்றுள்ளது. இங்கு தான் ஈசனை நோக்கி முருகன் தவம் இருந்ததாகவும் கூறப்படுகின்றது.
2. திருச்செந்தூர்
சூர பத்மனை முருகப் பெருமான் அழித்த திருத்தலமே இரண்டாம் படை வீடான திருச்செந்தூர். இங்கு ஆண்டு தோறும் கந்த சஷ்டி விழா மிகவும் சிறப்பாக நடைபெறுகிறது. ஊமையாக இருந்த குமர குருபரர், செந்திலாண்டவர் அருளால் பேசும் சக்தி பெற்று பாடும் திறனும் பெற்றது இங்குதான். டச்சு கொள்ளையர்களை நடுநடுங்க வைத்து, அவர்களையும் தன்னை வணங்க வைத்த தனி ஆற்றல் படைத்தவர் திருச்செந்தூர் முருகன் என்றொரு கர்ண பரம்பரைக் கதையும் உண்டு.
3. பழனி
இங்கு நவ பாஷணங்களால் உருவாக்கப்பட்ட ஞானப் பழமாக முருகப் பெருமான் விளங்குகின்றார். பழனி முருகனின் அழகை காணக் கண் கோடி வேண்டும் என்பார்கள். கிரிவலம் இங்கே பௌர்ணமி நாளில் நடைபெறுகிறது. சண்முகன் ஆண்டி கோலம் கண்டதும் இங்கேதான். மூன்றாம் படை வீடான பழனியில் ஆண்டுதோறும் நிகழும் பங்குனி உத்திரப் பெருவிழாவின் போது பல்வேறு காவடிகள் சுமந்து பாத யாத்திரையாகப் பக்தர்கள் வருகின்றனர். இங்குத் திருத்தேர் விழா, திருக்கல்யாண விழா, கந்த சஷ்டி விழா, ஆடிக் கிருத்திகை விழா ஆகியவையும் மிகச் சிறப்பாக நடக்கின்றன.
4. சுவாமிமலை
இந்த நான்காம் படை வீடான சுவாமி மலையில்தான் தந்தை சிவபெருமானுக்கே தனயன் சண்முகன் உபதேசம் செய்த திருவிளையாடல் நிகழ்ந்தது. இந்தத் திருத்தலத்தைத் திருமுருகாற்றுப் படையும், சிலப்பதிகாரமும் ‘திரு ஏரகம்’ என்று குறிப்பிடுகின்றன. தஞ்சை மாவட்டத்தில், கும்பகோணம் அருகிலுள்ள சுவாமி மலையில் ஆடிக் கிருத்திகை விழா, கந்த சஷ்டி விழா, வைகாசி விசாகப் பெருவிழா, பங்குனி உத்திரப் பெருவிழா ஆகியவை மிகவும் சிறப்பாக நடக்கின்றன.
5. திருத்தணி
சூரனை அழித்து சினம் அடங்கி அமைதி காண முருகப் பெருமான் திருக்கோவில் கொண்ட ஐந்தாம் படை வீடுதான் திருத்தணி. குறவர் குலப் பெண்ணான வள்ளியை முருகன் மணம்புரிந்த திருத்தலம் என்ற தனிச் சிறப்பும் திருத்தணிக்கு உண்டு. ஆடிக் கிருத்திகை விழா மிகவும் சிறப்பாக இங்கு நடக்கிறது.
6. பழமுதிர் சோலை
ஆறாம் படைவீடான இங்குதான் முருகன் சிறுவனாய் வந்து ஔவையாரைச் சோதித்த திருவிளையாடல் நிகழ்ந்தது. அந்த நாவல் மரத்தின் கிளை மரம் இன்றும் சோலைமலை உச்சியில் காணப்படுகிறதாம். அருணகிரிநாதர் இத்தலம் மீது திருப்புகழ் பாடியுள்ளார். விஷ்ணு கோயிலான அழகர் கோவில் இதற்கு அண்மையில் அமைந்துள்ளது. ‘அழகர் மலை’ எனவும் இது அழைக்கப்படுகிறது. மதுரையிலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் இந்தத் திருத்தலம் அமைந்துள்ளது.