Skip to main content

Lifestyle

தீபாவளி ஸ்பெஷல் : சுலபமான முறையில் ஐந்து பலகாரங்கள்

deepavali-sweets-snacks-(4).png
பலகாரங்கள் இல்லாத தீபாவளியா? கண்டிப்பாக இல்லை. ஒவ்வொரு வீட்டிலும் தீபாவளி கொண்டாட்டத்தின் ஆரம்பமே பலகாரம் செய்வதில் தான்!


ஆனாலும், பரபரப்பான வாழ்க்கைச் சூழலில் தீபாவளிக்குப் பலகாரங்களைச் சொந்தமாக செய்வது சற்று கடினம் தான். இருந்தாலும் வருடத்திற்கு ஒரு முறை வரும் பண்டிகைக்குச் சற்று மெனுக்கடலாம். புதிதாக என்ன பலகாரம் செய்வதென்று யோசிக்கறவங்களுக்கும் ஒரே விதமான பலகாரங்ளைச் செய்வது “போர்” என்பவர்களுக்கும் சுலபமாகவும் வித்தியாசமாகவும் செய்யக்கூடிய ஐந்து விதமான தீபாவளி பலகாரங்கள் இதோ:

1.ரோஸ் தேங்காய் லட்டு
    

மூலம்: spicytreats.net


தேவையான பொருட்கள் (15 ரோஸ் லட்டுகள்)
  • நெய் – 1 மேசைக்கரண்டி (tbsp)
  • தேங்காய்த் துருவல் – 2 கப்
  • சர்க்கரை – 1/3 கப்
  • ஏலக்காய்த் தூள் – ¼ தேக்கரண்டி (tsp)
  • பால் மாவு – ¾ கப்
  • ரோஸ் சிரப் (rose syrup) – ¼ கப்
  • வறுத்த தேங்காய்த் துருவல் (Desiccated Coconut) – ½ கப்
 
சுலபமான படிமுறைகள்
  1. வாணலியில் நெய்யை ஊற்றி மிதமான சூட்டில் தேங்காய்த் துருவலை 5 நிமிடங்களுக்குக் கிளற வேண்டும்.
  2. அதனுடன் சர்க்கரையைச் சேர்த்து, கரையும் வரைக் காத்திருக்க வேண்டும்.
  3. அதில் பால் மாவு, ஏலக்காய்த்தூள், ரோஸ் சிரப் ஆகியவற்றைச் சேர்க்க வேண்டும்.
  4. கலவையின் சூடு தணிந்த பின், அதை உருண்டைகளாகப் பிடித்து வறுத்த தேங்காய் துருவலில் பிரட்டி எடுத்தால், சுவையான ரோஸ் தேங்காய் லட்டுகள் தயார்.


 2. நெய் உருண்டை
      


மூலம் : Kannamma Cooks


தேவையான பொருட்கள் (20 நெய் உருண்டைகள்)
  • பொட்டுக் கடலை - 500 கிராம்
  • சர்க்கரை - 250 கிராம்
  • நெய் - 100 கிராம்
  • உடைத்த முந்திரி - 50 கிராம்
  • ஏலக்காய் – 6
 
சுலபமான  படிமுறைகள்:
  1. பொட்டு கடலை, சர்க்கரை, ஏலக்காய் ஆகியவற்றைப் பொடியாக அரைக்க வேண்டும்.
  2. மிதமான தீயில் கடாயில் நெய் விட்டு அதனுடன் உடைத்த முந்திரியைச் சேர்க்க வேண்டும்.
  3.  பொடியாக அரைத்த கலவையில் கடாயில் உருக்கிய நெய்யை ஊற்ற வேண்டும்.
  4. பின் அதை உருண்டைகளாகப் பிடித்தால் நெய் உருண்டைகள் தயார்.


3. கடலை உருண்டை
     

மூலம்: Yummy Tummy Aarthi


தேவையான பொருட்கள் (25 உருண்டைகள்)
  • வேர்க்கடலை - 2 கப்
  • சர்க்கரை / வெல்லம் - 1 கப்
  • தண்ணீர் - ½ கப்
  • எண்ணெய் / நெய் /அரிசி மாவு – தேவையான அளவு (உருண்டைப் பிடிப்பதற்கு ஏதுவாக)
 
சுலபமான  படிமுறைகள்
  1. வேர்க்கடலையை 3 – 4 நிமிடத்திற்கு வறுத்து ஆறவிட வேண்டும்.
  2. ஒரு கனமான பாத்திரத்தில் மிதமான சூட்டில் வெல்லத்தைப் சிறு பந்து போன்று உருட்டும் பதம் அடையும் வரைப் பாகு காய்ச்ச வேண்டும்.
  3. அடுப்பை அணைத்து அதில் வறுத்த கடலையைச் சேர்க்க வேண்டும்.
  4. ஓரளவு கடலை ஆறியப் பிறகு, கையில் நெய், எண்ணெய் அல்லது அரிசி மாவு, இவற்றில் ஏதாவது ஒன்றை விருப்பத்திற்கு ஏற்றவாறு கையில் தேய்த்து உருண்டை பிடித்தால், ஆரோக்கியமான இனிப்புக் கடலை உருண்டைகள் தயார்.


4. சாக்லேட் பால் பவுடர் பர்ஃபி
     
     மூலம்: Swasthi’s Recipe


தேவையான பொருட்கள் (6 துண்டுகள்)
  • நெய் - ¼ கப்
  • பால் மாவு - 1 ¼ கப்
  • கோகோ பவுடர் (cocoa powder), - 3 மேசைக்கரண்டிகள்
  • பால் - ¼ கப்
  • பொடித்த சர்க்கரை - ½ கப்
  • சாக்லேட் சிப்ஸ் – விருப்பத்திற்கு ஏற்றவாறு
 
சுலபமான  படிமுறைகள்
  1. பாத்திரத்தில் நெய்யைச் சூடாக்கி அதில் பால் மாவு, கோக்கோ பவுடர் பால் ஆகியவற்றைச் சேர்த்தவுடன், அக்கலவை நன்றாகத் திரண்டு வரைக் காத்திருக்க வேண்டும்.
  2. அதனுடன் பொடித்த சர்க்கரையைச் சேர்த்து சில நொடிகளுக்குக் கிளரவும்.
  3. நெய் பிரிந்து வரும் போது நெருப்பை அடைத்துவிட்டு, ஒரு பாத்திரத்தில் நெய் தடவி அதில் கலவையை ஊற்ற வேண்டும்.
  4. இறுதியாக, சமம் செய்யப்பட்ட கலவையின் மேல் ‘சாக்லேட் சிப்ஸ்’ தூவி 5 நிமிடம் ஆறவிட்டால், சுவையான பர்ஃபி தயார்.


5. தட்டை
     
மூலம்: Dassana’s Veg Recipe


தேவையான பொருட்கள்
  • அரிசி மாவு - 1 கப்/125 கிராம்
  • பெருங்காயத்தூள் - 1/4 தேக்கரண்டி
  • மிளகாய்த்தூள் – ½ தேக்கரண்டி
  • வறுத்த உளுத்தம் மாவு - 1 மேசைக்கரண்டி
  • கடலை மாவு - 1 மேசைக்கரண்டி
  • கறிவேப்பிலை – சிறு கொத்து
  • ஊற வைத்த கடலைப் பருப்பு - 2 மேசைக்கரண்டிகள்
  • வறுத்த நிலக்கடலை – ¼  கப்
  • வெண்ணெய்- 1  ½ மேசைக்கரண்டிகள்
  • எண்ணெய் - தேவையான அளவு
  • உப்பு – தேவையான அளவு
 
சுலபமான  படிமுறைகள்
  1. கடாயில் அரிசி மாவை மிதமான சூட்டில் 2 நிமிடம் வறுக்க வேண்டும்.
  2. அரிசி மாவு முழுமையாக ஆறியப்பிறகு, அதில் கடலை மாவு, வறுத்த உளுத்தம் மாவு, பெருங்காயத்தூள், உப்பு, மிளகாய்த்தூள், கறிவேப்பிலை, ஊறவைத்த கடலைப் பருப்பு, வறுத்த நிலக்கடலையைச் சேர்த்து அதனுடன் சூடான வெண்ணெய்யைச் சேர்க்க வேண்டும்.
  3. நன்றாகப் பிசைந்து அதில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து முறுக்கு மாவு பக்குவதற்குப் பிசைய வேண்டும்.
  4. அக்கலவையைத் தட்டி எண்ணெய்யில் போட்டு எடுத்தால் தட்டை உண்ணுவதற்குத் தயார்.
 
இத்தீபாவளிக்கு உங்கள் வீட்டின் தீபாவளி ஸ்பெஷலாக இந்த ஐந்து பலகாரங்களைச் செய்து குடும்பத்துடன் உண்டு மகிழுங்கள்.
சமையல் குறிப்புக்கான மூலம் – yummytummyaarthi.com, cookdtv.com

ஆஸ்ட்ரோ தீபாவளி சிறப்பு உள்ளடகங்கங்களுக்கு:
 https://programs.astroulagam.com.my/inaivominaippom
 

Advertisement